மன்னாரில் சிறப்புடன் இடம்பெற்ற ‘வர்ண இரவு’ நிகழ்வு.

விளையாட்டுத் துறையை நாம் ஊக்குவிப்பதன் மூலம் இளம் சமூகத்தினரை நல்ல நேரிய வழிகளுக்கு கொண்டு செல்ல உதவும். என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் சகல துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களையும் ஊக்குவித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் ‘வர்ண இரவு’ நிகழ்வு புதன்கிழமை (09) மாலை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

-மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் சாணு வவுண்டேசன் அனுசரணையுடன் மன்னார் மாவட்ட மேலதிக செயலாளர் வை.பரந்தாமன் தலைமையில் குறித்த கௌரவிப்பு நிகழ்வுகள் இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டார்.

கௌரவ விருந்தினர்களாக பிரதேச செயலாளர்கள் , வலயக்கல்வி பணிப்பாளர்கள் , திணைக்கள தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் விருந்தினர்கள் மற்றும் சகல துறைகளிலும் சாதனை நிலைநாட்டிய மன்னார் மற்றும் மடு கல்வி வலயத்தை சேர்ந்த மாணவர்களும் வாத்திய இசையுடன் மன்னார் நகர மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.

-பின்னர் மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்று சகல துறைகளிலும் சாதனையை நிலை நாட்டிய மாணவர்கள் விருந்தினர்களினால் கௌரவிக்கப் பட்டதோடு அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.

குறித்த நிகழ்வில் மாணவர்கள் , பெற்றோர் ஆசிரியர்கள் என பல நூற்றுக்கணக்கானவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில்- மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் பிரமத அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில்

விளையாட்டுத் துறையை நாம் ஊக்குவிப்பதன் மூலம் இளம் சமூகத்தினரை நாம் நல்ல நேரிய வழிகளுக்கு கொண்டு செல்ல உதவும்.

வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் ஒரு மாவட்டமாக இருக்கின்றது.

மாகாண மற்றும் தேசிய ரீதியில் மன்னார் மாவட்ட மாணவர்கள் பல சாதணைகளை ஈட்டி வருகின்றனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாகாண மட்டத்தில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் மன்னார் மாவட்டம் முதல் இடத்தைப் பெற்றிருந்தது.

இது உண்மையில் வெற்றிகரமான போற்றதலுக்குரிய விடயமாக நாங்கள் பார்க்கின்றோம்.

இச்த வெற்றிகளுக்கு பாடசாலை அதிபர்கள் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மாணவர்களின் மிகவும் அர்ப்பணிப்பான செயல்பாட்டாலேயே இது சாத்தியமாகியுள்ளது.

இருந்தும் அனைத்து விடயங்களையும் கொண்டு நாம் கவனிக்கும்போது மன்னார் மாவட்டம் வடக்கு மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் ஒரு பின்னடைவாக காணப்படுகின்றது.

யாழ் மாவட்டத்துடன் போட்டியிட முடியா விட்டாலும் ஏனைய மாவட்டங்களுடன் போட்டியிட்டு முதன்மை பெறக்கூடியதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.

எதிர்வரும் மாகாண மட்டத்தில் நடைபெற இருக்கும் போட்டிகளில் மன்னார் மாவட்டம் சகல துறைகளிலும் முன்னேற்றம் கொண்ட ஒரு மாவட்டமாக அமைய வேண்டும்.

இவ்வாறான கௌரவிப்பின் மூலம் நாம் இவர்களை மேலும் ஊக்குவிப்பதன் மூலம் முன்னேற்றம் காண வழி சமைக்க முடியும்.

நான் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின் இவ்வாறான வீரர்கள் வீராங்கணைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணக்கரு உதித்தது. அதற்கமையவே இன்று இந்த வர்ண இரவு நிகழ்வு மூலம் இது நடைபெறுகின்றது என இவ்வாறு தெரிவித்தார்.

(வாஸ் கூஞ்ஞ)