பாராளுமன்ற தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் ஆரம்பம்!

2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான சகல பூர்வாங்க நடவடிக்கைகளும் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகருமான ஜஸ்டினா முரளிதரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (04) திகதி இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

மாவட்டத்தின் 3 தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 442 வாக்கெடுப்பு நிலையங்களில் 449,686 பேர் தேர்தலிலே வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதியில் இருந்து ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி வரைக்கும் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட இருக்கின்றன. இற்றைவரைக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பனத்தை செலுத்தியுள்ளதுடன், இன்றைய தினத்தில் ஒரு சுயேட்சை குழு தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் பூரா கவும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான வகுப்புகள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கான வகுப்புகளும் எதிர்வரும் வாரங்களில் இடம்பெற உள்ளது என தெரிவித்தார்.
எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு