இளம் சமூகத்துக்காக இம்முறை நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாது விட்டுக் கொடுக்கும் நிலையில் இருந்தபோதும் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்கவும் மன்னார் தமிழரசுக் கட்சி கிளையின் வேண்கோளுக்கு இணங்கவும் மீண்டும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆலோசித்ததாகவும் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வன்னி தேர்தல் தொகுதியான மன்னார் மாவட்டத்திலிருந்து தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தல் வேட்பாளர்களைத் தெரிவு சம்பந்தமாகவும்
இக்கட்சியின் தேர்தலுக்கான நிதிபற்றியும் கலந்துரையாடவும் தமிழரசுக் கட்சி சார்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வெள்ளிக்கிழமை (04) மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டு கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழரசுக் கட்சி சார்பாக மன்னார் மாவட்டத்திலிருந்து மூன்று நபர்களின் பெயர்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதில் முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் , முன்னாள் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் மற்றும் மன்னாரில் பிரபலயமான இளம் சட்டத்தரணி செ.டினேசன் ஆகியோர் முன்மொழியப்பட்டு தேர்தலில் களம் இறங்க இருக்கின்றனர் என இக்கட்சி வட்டாரம் தெரிவித்தள்ளது.
முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து போட்டியிட வேண்டும் என தமிழரசுக் கட்சி மன்னார் கிளை ஏற்கனவே தீர்மானம் எடுத்திருந்தபோதும் இளம் சமூகத்துக்காக தான் இம் முறை தேர்தலில் நிற்க மாட்டேன் என தெரிவித்திருந்தார்.
இருந்தும் கட்சி மற்றும் தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறையும் தான் தேர்தலில் களம் இறங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாக சாள்ஸ் நிர்மலநாதன் நமது நிருபரிடம் இவ்வாறு தெரிவித்தார்.
(வாஸ் கூஞ்ஞ)