நற்பிட்டிமுனை நூலகத்தில் சிறுவர் பிரிவு திறந்துவைப்பு.!

கல்முனை, கரைவாகு மேற்கு நற்பிட்டிமுனை பொது நூலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பிரிவு இன்று வியாழக்கிழமை (03) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நூலகர் எஸ்.எம்.ஆர். அமினுதீன் தலைமையில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் பிரதம அதிதியாகவும் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் கெளரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது சிறுவர்களின் கலை கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அவர்களுக்கு பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் இந்நூலகத்தின் துரித அபிவிருத்திக்கு கல்முனை மாநகர ஆணையாளர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்காக நூலக வாசகர் வட்டத்தினால் இதன்போது நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நற்பிட்டிமுனை பொது நூலக வாசகர் வட்டத்தின் தலைவரும் முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினருமான ஏ. அப்துல் கபூர் செயலாளரும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகருமான எஸ். சிராஜுதீன் உட்பட வாசகர் வட்ட உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபைக்குட்பட்ட அனைத்து பொது நூலகங்களிலும் சிறுவர்களுக்கென பிரத்தியேகமான பிரிவுகளை அமைக்குமாறு கல்முனை மாநகர ஆணையாளர் நௌபீஸ் அவர்கள் வழங்கிய அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைகளுக்கு அமைவாக இச்சிறுவர் பிரிவு உருவாக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.