(சுமன்) பாராளுமன்றத் தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் அரசியற் கட்சிகள் பலவும் கூட்டணி அமைத்தல் மற்றும் வேட்பாளர் நியமனங்கள் போன்றன தொடர்பில் பல்வேறுபட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன. அந்த அடிப்படையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட செயற்குழுக் கூட்டம் இன்றைய தினம் வெல்லாவெளியில் அமைந்துள்ள மாவட்டக் காரியாலயத்தில் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் சாந்தன், மாவட்டப் பொறுப்பாளர் சுதாகரன் மற்றும் மத்திய செயற்குழு உறுப்பினர் தீபன் உள்ளிட்ட கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகவும், அதனைத் தொடர்ந்ததான வடக்கு கிழக்குப் பகுதிகளில் குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் நிலவும் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது. மேலும் எதிர்வரும் நவம்பர் 14ம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்;றத் தேர்தல் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், ஜனநாயகப் போராளிகள் சார்பில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் கட்சிகளின் ஒற்றுமை, இழந்துள்ள தமிழர் பிரதிநிதித்துவங்களை கட்சிகளின் ஒற்றுமையின் மூலம் மக்களை ஒற்றுமைப் படுத்தி எவ்வாறு மீளப்பெற முடியும் என்பது தொடர்பில் பலமாக ஆராயப்பட்டதுடன், ஒற்றுமையான ஒரு களத்திலேயே ஜனநாயகப் போராளிகள் கட்சியும் இணைந்து இந்தத் தேர்தலை முகங்கொடுக்கும் எனவும் உபதலைவரால் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நமக்குள் ஏற்படும் பிரிவுகள் தமிழ் மக்களின் விடயங்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதோடு, விரும்பத்தகாதவர்களுக்கே அது சாதமாக அமைந்து விடுகின்றது. அது மாத்திரமல்லாமல் போராளிகளும் ஒவ்வொரு தரப்பாகப் பிரிந்து செயற்படுவதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகவே இருக்கின்றது. இவ்வாறு ஒவ்வொருவரும் பிரிந்து நின்ற காலம் மறைந்து விட்டது. மீண்டும் போராளிகள் அனைவரும் ஒருமித்து ஜனநாயக ரீதியில் நமது பலத்தைக் காட்ட வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கின்றோம். இதனை அனைவரும் உணர்ந்து செயற்படுவார்கள் என நம்;பகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இறுதியில் பாராளுமன்றத் தேர்தலில் கட்சி சார்பில் மட்டக்களப்பில் கட்சியின் உபதலைவரான என்.நகுலேஸ் அவர்களை வேட்பாளராக நியமிப்பது எனவும் அம்பாறை மாவட்டத்திலும் ஜனநாயகப் போராளிகள் சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவதெனவும் ஒருமித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.