தியத்தலாவ எச்.எப். ரிஸ்னாவுக்கு கௌரவப் பட்டம் வழங்கி கௌரவிப்பு

பன்னூலாசிரியர் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா, கலை இலக்கியத் துறையில் ஆற்றி வரும் பங்களிப்புகளுக்காக “இலக்கியத் தென்றல், லங்கா புத்திர, தேசபந்து” ஆகிய கௌரவப் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சர்வதேச மனித உரிமைகள் பேரவை மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனத்துடன் இணைந்து, “தேசிய கலை அரண்”அமைப்பின் ஏற்பாட்டில் “வாழும் போதே வாழ்த்துவோம்’ என்ற தொனிப் பொருளில் 250 கலைஞர்களை கௌரவிக்கின்ற நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற போதே, மலையகத்தைச் சேர்ந்த எச்.எப். ரிஸ்னா பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொழிற்சங்க சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகமாகச் செயற்பட்ட சமன் ரத்னப்பிரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதோடு, இந்திக விஜய் ரத்ன, மாநகர முதல்வர் சுஜீவ மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளர் சுனில் பெரேரா, கண்ணகி கலாலயத்தின் தலைவர் இளங்கோ உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

கலை இலக்கியத் துறையில் இதுவரை 11 நூல்களை வெளியிட்டுள்ள எச்.எப். ரிஸ்னா ஏற்கனவே, காவியப் பிரதீப, கவிச்சுடர், கலையொளி, கலைநிலா ஆகிய பட்டங்களும் எழுசுடர் விருது, வெற்றியாளர் விருது, கவித் தேன் விருது, பொன்னொளி விருது போன்ற விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.