மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி தாண்டியடி ஸ்ரீ முருகன் விளையாட்டு மைதானத்தில் 27.09.2024ஆம் திகதி இடம்பெற்றது. வலயக்கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டி நிகழ்ச்சியில் குறித்த வலயத்திற்குட்பட்ட மண்முனை தென்மேற்கு, மண்முனை மேற்கு, ஏறாவூர்பற்று கோட்டத்திற்குட்பட்ட 54அணிகள் பங்கெடுத்தன. தரம் – 3, 4, 5 ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த ஆண், பெண், கலப்பு அணிகளே இப்போட்டியில் கலந்து கொண்டிருந்தன. இதன்போது வெற்றியீட்டிய முதல் மூன்று அணியினருக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
முதலிடங்களைப் பெற்ற அணியினருக்கு வெற்றிக்கிண்ணங்களும் கொடுக்கப்பட்டன. வலய பிரதிக்கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். வலய ஆரம்பப்பிரிவினால் குறித்த போட்டி ஒழுங்குசெய்யப்பட்டு நடாத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.