முப்பதாவது ஆண்டில் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள்

1994ம் ஆண்டு சிட்னிப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்க பட்டதாரிகள் குழுவினரால் தொடங்கப்பட்டு, தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் முப்பதாவது வருடமாக நடாத்தப்பட்டு வருகிறது என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

புலம்பெயர் மண்ணில் எங்கள் மாண­வர்­கள் தமி­ழில் பேச­வும் எழுதவும்
ஊக்­குவிக்­க­வும் தமிழ்­மொழி
என்­றென்­றும் நம் நாவி­லும்
இல்­லங்­க­ளி­லும் ஒலித்­துக்­கொண்டே இருக்­க­வும் இந்த பெரு முயற்சியினை அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம் மேற்­கொண்டு வருகிறது.

புலம்பெயர் மண்ணில் தாய்மொழி:

புலம் பெயர் மண்ணில் எமது தாய் மொழியாகிய தமிழ் மொழியும் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். அதே போன்று பெற்ற தாயும், பிறந்த பொன்னாடும் என்றென்றும் மதிக்கப்பட வேண்டியவை. தமிழ்மொழி போன்ற உலகின் மூத்த மொழி நிச்சயம் பாதுகாக்கப்பட்டே ஆக வேண்டும். அதனைப் பாதுகாப்பதற்கான வளமும், வலிமையும் இன்றைய சந்ததியுனரிலேயே தங்கியுள்ளது.

உலகின் மூத்த மொழிகளுள் ஒன்றாக விளங்கும் தமிழ் மொழி, பல நூற்றாண்டுகளாக, பல்வேறு போர்களையும், பிறமொழித் தாக்குதல்களையும் எதிர்கொண்டு, சமாளித்து நின்று நிலைத்த எம் தாய் மொழி தொடர்ந்தும் அவ்வாறு நிலை கொள்ள வேண்டுமாயின், புலம் பெயர் மண்ணிலும் நிலைத்து நிற்க பெரும் பணிகள் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இத்தகைய செழிமையான பணியினை
தற்போது அவுஸ்ரேலியாவில் முப்பது ஆண்டுகளாக தொடரும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் சான்று பகர்கின்றன. அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் தலைமையின் கீழ் நடாத்தப்பட்டு வருகின்றமை புலம்பெயர் மண்ணில் வரலாற்றுச் சாதனையாக அமைந்துள்ளது.

அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்க பெரும்பணி:

எதிர்கால சந்ததியினர்க்கு தேவையாய் அமையும் இப்போட்டிகளிலே தமிழ் இளையோர் பெருமளவிலே பங்குபற்றித் தங்களின் தமிழ் ஆற்றலை வளர்த்து வருகின்றமைக்கு, அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் சேவை பாராட்டுதற்குரியது.

ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்போட்டிகளில் பங்குகொள்வர். அத்துடன் இப்போட்டிகள் அவுஸ்திரேலியா, நியூசிலாந்தின் எல்லா மாநகரங்களில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

மாநில மற்றும் தேசிய மட்டங்களில் நடாத்தப்படுகின்ற இப்போட்டிகளின் பிரதான நோக்கமாவது தமிழையும் தமிழப் பண்பாட்டையும் பேணிக் காப்பாற்றுவதோடு எதிர்வரும் சந்ததிகளுக்கும் இவற்றை எடுத்துச் செல்லக்கூடிய தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த இளைஞர்களை உருவாக்குவதாகும்.

அத்தோடு எம் இளைய தலைமுறையினர் எந்நிலையிலும் தளராமல் உறுதியாக இருக்க வேண்டும் என்பதை அறிவூட்டும் வகையிலும்,தோல்விகளைக் கண்டு தளர்ந்து போகாமல், எதிர்த்துப் போராடக் கற்றுக் கொள்ள உத்வேகம் அளிக்கும் வகையில் இந்தப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

மூன்று தசாப்தங்களை தாண்டி பயணிக்கும் சேவை:

மூன்று தசாப்தங்களைத் தாண்டிப் பயணிக்கும், அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்க போட்டிகளில், தமிழை நேசிக்கும் தலைமுறைகளின் உருவாக்கத்துக்கு வழிசமைக்க, வருடந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்றனர்.

நவீன உலகு சவால்கள் நிறைந்ததாக உள்ளது. எமது தலைமுறையில் நாம் எதிர்கொண்ட சவால்களை விடவும் அதிக சவால்களை தற்போதைய தலைமுறை எதிர்கொள்கின்றது. சவால்களை சிறப்பாக எதிர்கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றிகரமான மனிதர்களாக விளங்க முடியும்.

இன்று நாம் எதிர்கொள்ளும் சவால்களை வெற்றி கொள்ள தமிழ்மொழி அறிவு இன்றைய தலைமுறைக்கு அல்லது அடுத்துவரும் தலைமுறைக்கு எந்த வகையில் உதவப் போகின்றது என்பதை கருத்திற் கொண்டு, அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம் செயற்பட்டு வருகின்றது.

தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2024:

இவ்வருடமும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளில் பல நூறு மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உலகமெங்கும் வாழும் பல்லாயிரக்கணக்கான இளையோரை “தமிழ்” உணர்வால் இணைத்த இந்த மகத்தான பயணத்துக்கு பட்டதாரிகள் தமிழர் சங்கம் மிக்க அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.