இலங்கையின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஒன்பதாவது ஜனாதிபதியினைத் தெரிவு தேர்தலானது இன்றைய தினம் இடம்பெற்றது. இத்தேர்தலில் அம்பாறை மாவட்ட மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.
இம்; மாவட்டத்தில் சாதாரண பொதுமக்கள் மற்றும் விஷேட தேவையுடையோர் போன்றோர் சுதந்திரமாகவும், நீதியானதுமாக வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட தேர்தல்கள் தெரிவத்தாட்சி அதிகாரியுமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்காக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தேர்தல் கடமைகளுக்காக சுமார் ஐயாயிரம் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல்களை கண்காணிக்கும் பணிகளுக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்கென இம்மாவட்டத்தில் சுமார் 2500 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது.
இம்முறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 5 இலட்சத்து 55 ஆயிரத்து 432பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் சுமார் 26 ஆயிரம் பேர் அஞ்சல் மூலமாக தமது வாக்குகளை ஏற்கனவே செலுத்தியுள்ளனர். அம்பாறை தேர்தல் தொகுதில் ஒரு இலட்சத்து 88 ஆயிரத்து 222 பேரும், பொத்துவில் தொகுதியில் ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 653 பேரும், சம்மாந்துறைத் தொகுதியில் 99 ஆயிரத்து 727 பேரும், கல்முனைத் தேர்தல் தொகுதியல் 82 ஆயிரத்து 830 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
குறிப்பாக இம்மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் இரண்டு இலட்சத்து எண்பதாயிரத்து 190 பெண் வாக்காளர்களும், இரண்டு இலட்சத்து 75 ஆயிரத்து 242 ஆண் வாக்காளர்களும் பதிவு செய்யப்பட்டுளனர்.
இம்மாவட்டத்தின் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்பாறை தேர்தல் தொகுதியில் 184 வாக்களிப்பு நிலையங்களும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 93 வாக்களிப்பு நிலையங்களும், கல்முனை தேர்தல் தொகுதியில் 74 வாக்களிபு நிலையங்களும், பொத்துவில் தொகுதியில் 177 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்பட்டிபருந்தன.
இதேவேளை, இம்மாவட்டத்தில் வாக்கெண்ணும் பிரதான நிலையமாக அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்பவியல் கல்லூரி செயற்படுகின்றது. மாலை 4 மணிக்கு பின்னர் வாக்கெடுப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பலத்த பாகுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
வழமை போன்றல்லாது இம்முறை வாக்குப் பெட்டிகள் அட்டைப் பெட்டிகளாக அமையப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது. கடந்த காலங்களில் மரத்திலான பெட்டிகள் தேர்தல் செயற்பாடுகளுக்காக கையாளப்பட்டு வந்த நிலையில் இம்முறை வாக்குச் சீட்டு பெரியளவில் அமையப் பெற்றுள்ளதனால் வாக்குப் பெட்டிகளும் மாற்றப்பட்டதாக தெரிய வருகிறது.
வாக்கெண்ணும் நிலையமான அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பக்; கல்லூரி சுற்று வட்டாரமானது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறது.