மட்டக்களப்பு மாவட்ட தமிழர்கள் எப்போதுமே தமிழ்த் தேசியத்தின் மீது பற்றுக் கொண்டவர்கள். தமிழரின் விடுதலை போராட்டத்திற்காக பல்லாயிரம் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள். கோடிக்கணக்கான பெறுமதிவாய்ந்த உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்தவர்கள். போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய உணர்வு இன்னும் அழிந்துபோகவில்லை கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்கள் மூலம் பறைசாற்றியிருக்கிறார்கள்.
விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த கருணா அம்மான், பிள்ளையான் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த வியாழேந்திரன் போன்றோர் அரசுடன் இணைந்தாலும் அவர்களுக்கும் மக்களுக்குமான உறவு பற்றாக்குறையாகவே காணபப்டுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மூன்று தேர்தல் தொகுதிகள் காணப்படுகின்றன. இதில் கல்குடா மற்றும் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிகளில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாகவும் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் சிறுவான்மையாகவும் வாழ்கின்றனர். பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 100 சதவீதம் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.
இலங்கையில் நடைபெற்ற எட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கான தேர்தல்களில் எழு தேர்தல்களில மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது ஐக்கிய தேசிய கட்சி இணைந்த கூட்டணி வேட்பாளர்களுக்கே அதிகபடியான வாக்குகளை வழங்கியுள்ளார்கள்.
2019 ஜனாதிபதி தேர்தலின் போது நாடுமுழுவதும் கோட்டா அலை வீசிய போதும் மட்டக்களப்பு மாவட்ட மக்களில் 79 சதவீதமானவர்கள் சஜித் பிறேமதாஸவிற்கே வாக்களித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச தரப்பு தமிழ் பிரதிநிதிகளாக செயற்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன், இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோரின் அரசியல் செயற்பாடுகள் காரணமாகவும் ராஜபக்ஷ குடும்பத்தின் மீதுள்ள வெறுப்பு காரணமாகவும் அவரைத் தோற்கடிக்க வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வகுத்த வியூகத்தின் அடிப்படையில் சஜித் பிறேமதாஸவிற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வாக்களித்தனர். இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய பங்களிப்பினைச் செய்துள்ளது.
1982ம் ஆண்டு முதலாவது ஜனாதிபதி தேர்தல் பிரதான வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் ஜே.ஆர். ஜயவர்தன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் ஹெக்டர் கொப்பேகடுவ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் குமார் பொன்னம்பலம் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ஜே.ஆர். ஜயவர்தன 40.05 சதவீத வாக்குகளையும், குமார் பொன்னம்பலம் 39.22 வாக்குகளையும், ஹெக்டர் கொப்பேகடுவ 18.06 சதவீத வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர். இதில் பட்டிருப்குத் தொகுதியில் குமார் பொன்ம்பலம் 65 சதவீதமான வாக்குகளைப் பெற்றார்.
1988ம் ஆண்டு இரண்டாவது ஜனாதிபதி தேர்தல் பிரதான வேட்பாளர்களாக ஐக்கிய தேசியக் கட்சியில் ரணசிங்க பிறேமதாஸ, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் சிறிமாவோ பண்டாரநாயக்க, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியில் ஒஸ்வின் அபேயகுணசேகர ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ரணசிங்க பிறேமதாஸ 50.99 சதவீத வாக்குகளையும், ஒஸ்வின் அபேயகுணசேகர 31.63 வாக்குகளையும், சிறிமாவோ பண்டாரநாயக்க 17.38 சதவீத வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
1994 ஐக்கிய தேசியக் கட்சிக்கு மறக்க முடியாத ஆண்டு 17 வருடகால தொடர் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு முடிவுகட்டப்பட்ட ஆண்டு. 1994ல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கைப்பற்றினார்.
பிரதான வேட்ப்பாளர்களாக பொதுஜன ஐக்கிய முன்னணியில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சியில் ஸ்ரீமதி திஸாநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். இதில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 87.30 சதவீத வாக்குகளைபெற்றார். ஸ்ரீமதி திஸாநாயக்க 8.93 வாக்குகளை மாத்திரமே பெற்றார்.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே நேரடி யுத்தம், உயிரிழப்புகள், உடைமை இழப்புகள், இடம்பெயர்வு, அகதிமுகாம் என பல துன்பங்களை அனுபவித்த தமிழர்களுக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சமாதான தேவதையாக தேன்றியதான் காரணமாக அதிகபடியான வாக்குகள் அளிக்கப்பட்டன.
1999ம் ஆண்டு நான் ஜனாதிபதி தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை எதிர்த்து மீண்டும் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தனர். பிரதான வேட்பாளர்களாக பொதுஜன ஐக்கிய முன்னணியில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கஇ ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ரணில் விக்கிரமசிங்க 61.19 சதவீத வாக்குகளையும், சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க 34.66 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.
2005ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றிபெற்றிருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவரால் இரண்டாம் இடத்தையே பெற முடிந்தது.
பிரதான வேட்பாளர்களாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியில் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 79.51 சதவீதமானோரும் மஹிந்த ராஜபக்ஷறிற்கு 18.87 சதவீதமானோர் வாக்களித்தனர். குறித்த தேர்தலில் விடுதலைப் புலிகளின் பிளவு முக்கிய செல்வாக்குச் செலுத்தியது.
2010ம் ஆண்டு நடைபெற்ற ஆறாவது ஜனாதிபதி தேர்தல் தமிழர்களின் வரலாற்றில் முக்கியமானதாக கருதப்பட்டது தமிழர்களின் ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு நடைபெற்ற தேர்தல் இத்தேர்தலில் யுத்தத்திற்கு கட்டளையிட்ட மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும், யுத்தத்தை வழிநடத்திய சரத் பொன்சேகா புதிய ஜனநாயக முன்னணியிலும் பிரதான வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். சரத் பொன்சேகாவிற்கு 68.93 சதவீதமானோரும், மஹிந்த ராஜபக்ஷவிற்கு 26.27 சதவீதமானோர் வாக்களித்தனர்.
இந்த தேர்தலில் அரச தரப்பில் தமிழ் பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்த பிரதியமைச்சராக இருந்த விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா), கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) ஆகியோரின் தலைமையிலான பிரமுகர்கள் ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக செயற்பட்டனர். இவர்களின் கருத்துக்களை தமிழ் மக்கள் ஏற்கவில்லை. இவர்கள் அந்த நேரத்தில் ஜனாநாயக வழிக்குத் திரும்பியிருந்தாலும் அவர்களின் செயற்பாடுகள் அனைத்துமே ஆயுதக்குழுக்களின் அணுகுமுறையாகவே நோக்கப்பட்டது. அது மாத்திரமின்றி விடுதலைப் புலிகளிலிருந்து பிரிந்தவர்கள் இரண்டாகப் பிரிந்து எதிரும் புதிருமாக சொற்போரில் ஈடுபட்டுவந்திருந்தனர்.
சகோதர சமூகத்தின் அரசியல் சக்தியாக கருதப்படும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டனர். அரசியல் தாகத்துடன் காணப்பட்ட தமிழ் மக்கள் மத்தியில் ஆட்சிமாற்றம் தேவை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. இதன் காரணமாக அமோகமான வாக்குகளை சரத் பொன்சேகாவிற்கு மட்டக்களப்பு மக்கள் வழங்கினர். இருந்த போதும் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் தெரிவானார்.
2015ம் ஆண்டு ஏழாவது ஜனாதிபதி தேர்தல் ஆட்சி மாற்றம் தேவை என காத்திருந்த தமிழர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக அமைந்தது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பிரிந்து ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பல அமைப்புக்கள் கூட்டணியாக மைத்திரிபால சிறிசேனவை புதிய ஜனநாயக முன்னணியில் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவினை எதிர்த்து களமிறக்கினர்.
இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து ஆட்சி மாற்றத்துக்காக வாக்களித்தனர். இந்த தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை மைத்திரிபால சிறிசேனவிற்கு 209,422 வாக்குகள் 81.62 சதவீதமான வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு 41,631 வாக்குகள் 16.22 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானது ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதம மந்திரியாக நியமித்து நல்லாட்சி என்ற ஒரு அரசாங்கம் உருவானது இந்த ஆட்சியின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கைகொண்டனர். தமிழ் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டன, தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் படிப்படியான குறைக்கப்பட்டு காணிக்கள் ஒரு பகுதி உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டன இவ்வாறு சில தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்த போதிலும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக் கொடுப்பதில் ஆர்வம்காட்டுவது மிகக் குறைவாகவே காணப்பட்டது.
2019ம் ஆண்டு எட்டாவது ஜனாதிபதி தேர்தல் பிரதான வேட்பாளர்களாக புதிய ஜனநாயக முன்னணியில் சஜித் பிரேமதாசவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் கோட்டபாய ராஜபக்ஷவும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் நாட்டில் சிங்களப் பிரதேசங்களில் கோட்டா அலை வீசியது அவர் 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். ஆனால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் சஜித் பிறேமதாஸவிற்கே வாக்களித்தனர்.
2019 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிறேமதாஸவிற்கு 238,649 வாக்குகள் 78.70 வாக்குகளையும் கோட்டபாய ராஜபக்ஷவினால் 38,460 வாக்குகள் 12.68 சதவீதம் மாத்திரமே பெற முடிந்தது.
இம்முறை நடைபெறவுள்ள ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் சஜித் பிறேமதாஸ, தேசிய மக்கள் சக்தியில் அநுரகுமார திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாமல் ராஜபக்ஷ, தமிழ் பொது கட்டமைப்பு சார்பில் சுயேட்சையாக பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சுயேட்சையாக ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
தமிழ் மக்கள் தமிரருக்கே வாக்களிக்க வேண்டும் என்ற கோஷம் மாவட்டத்தில் வலுப்பெற்றுள்ள நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் பொது கட்டமைப்பு சார்பில் பாக்கியசெல்வம் அரியநேத்திரனுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் மற்றும் பொருளாளர் உள்ளிட்டோர் அரியநேத்திரனுக்கு ஆதரவாக தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் உட்பட்ட தமிழரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட மூத்த உறுப்பினர்கள் தமது பூரண ஆதரவினை அரியநேத்திரனுக்கு வழங்க தீர்மானித்து பிரசார பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் தமிழனுக்கே வாக்களிக்க வேண்டும் என்ற கேஷம் வலுப்பெறும் சந்தர்ப்பத்தில் சிங்கள வேட்பாளர்களின் வாக்குவீதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்படுகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு ஆதரவு வழங்குவதாக தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்ணணி மற்றும் தொகுதி பிரதேச கிளை உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிறேமதாஸவிற்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பளர்கள் உறுப்பினர்கள் மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களில் தமது பிரசார பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
இராஜாங்க அமைச்சர்களான சிவநேசதுரை சந்திரகாந்தன், சாதாசிவம் வியாழேந்திரன் ஆகியோர் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக மட்டக்களப்பின் தமிழ் பிரதேசங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஆதரவாக சில குழுக்கள் மாவட்டத்தில் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் தமிழ் மக்கள் வாக்களிப்பு வீதத்தில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்தும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க யாரும் முன்வராத நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் மட்டக்களப்பு அமைப்ளபாளர் ராஜன் மயில்வாகனம் தற்போது அவருடன் இணைந்துள்ளார்.
முஸ்லிம் பிரதேசங்களைப் பொறுத்தவரை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்ப்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகள் நேரடியாக பிரசார நடடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநருமான நஸீர் அகமட், அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் இணைந்து பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாஸவிற்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
பேரின்பராஜா சபேஷ்