கொக்கட்டிச்சோலையில் தேரோட்டம்

சுயம்பு லிங்கமாய் தோன்றிவீற்றிருக்கும் கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த தேரோட்டம் எதிர்வரும் 22.09.2024ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04மணிக்கு இடம்பெறவுள்ளது.

கிழக்கிலங்கையில் தேரோடும் திருத்தலம் எனப்பெயர்பெற்றதும், வருடாந்த மகோற்சவத்தினை தேரோட்டம் என அழைக்கப்படுகின்ற ஒரேயொரு ஆலயமாக கருதப்படுவது கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயமாகும்.
இவ்வாலயத்தின் வருடாந்த மகோற்சமானது கடந்த 04.09.2024ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக குடிமக்களின் உபயத்துடன் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. மகோற்சவ காலத்தில் தம்பபூசை, வச்ந்த மண்டப பூசை, சுவாமி உள்வீதி வலம் வருதல், வெளிவீதி வலம் வருதல் போன்றன விசேடமாக நடைபெறுகின்றன.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் இடம்பெற்றதனைத் தொடர்ந்து அன்றிரவு முனைக்காடு வீரபத்திரர் ஆலய முன்றலில் திருவேட்டைத்திருவிழாவும் எதிர்வரும் திங்கட்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெற்று ஆலய மகோற்சவம் நிறைவு பெறவிருக்கின்றது.

2000ஆண்டுகள் பழமையான இரண்;டு கட்டுத்தேர்கள் ஆண் அடியார்களினால் வடம்பிடித்து இழுக்க மணல்மண்ணில் சில்புதையுண்டு வலம் வருகின்ற நிகழ்வே தேரோட்டமென அழைக்கப்படுகின்றது. இத்தேர்களை இழுப்பதற்கான புதிய வடக்கயிறுகள் கன்னன்குடாவில் திரிக்கப்பட்டு சம்பிரதாயபூர்வமாக திங்கட்கிழமை ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டுள்ளன.