சிங்கள ஜனாதிபதிகள் மீதான நம்பிக்கையின்மையே இன்றைய தமிழ் பொது வேட்பாளரின் வரவு.

தொடர்ச்சியாக இலங்கையை ஆண்ட சிங்கள ஜனாதிபதிகள் மீதான நம்பிக்கையின்மையே இன்றைய தமிழ் பொது வேட்பாளரின் வரவு.
அவருக்கு அளிக்கும் வாக்கு வெல்வதற்கல்ல; ஒற்றுமையை பறைசாற்றும் வாக்கு

இவ்வாறு தாயக செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கலாநிதி கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் விசேட செய்தியாளர் சந்திப்பு காரைதீவு பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மாநாட்டில் கட்சி பிரமுகர்களான முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி சமுக செயற்பாட்டாளர் வினாயகம் விமலநாதன் ஆகியோரும் சமுகமளித்திருந்தனர்.

தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் ஊடாக தமிழ் மக்களின் எதிர்கால திட்டங்கள் சிறப்பாக செயற்படும் என்றார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது ..

கடந்த எட்டு ஜனாதிபதிகளுக்கு வாக்கு போட்டு தமிழர்கள் கண்ட பலன் என்ன?எட்டு ஜனாதிபதிகளும் தமிழ் மக்களை ஏமாற்றினார்கள்.
பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திக்கப்பட்டன. பல உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. ஆனால் அத்தனையும் கிழித்தெறியப்பட்டு ஏமாற்றப்பட்டதே வரலாறு .
தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் புத்தர் சிலைகளை அமைத்து நில ஆக்கிரமிப்பு செய்கிறார்கள்.அந்த வகையில் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்கு போடத்தான் வேண்டுமா? சற்று சிந்தியுங்கள். இம்முறையாவது சர்வதேசத்திற்கு எமது ஒற்றுமையை வெளிக்காட்டுமுகமாக சங்குக்கு வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகின்றேன் .

86 அமைப்புகள் ஏழு அரசியல் கட்சிகள் இணைந்து பொதுக் கட்டமைப்பு ஊடாக நிறுத்தப்பட்ட பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு அந்த வாக்கை அளித்து எமது ஒற்றுமையை காட்டுவோம் .
இது வெல்வதற்கான வாக்கு அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எமது ஒற்றுமைக்கான சின்னம் தான் இது.
இன்னும் சிங்கள ஜாதி வெறி வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் நாமே நமக்கு சங்கூத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை எழும்.

ஆறு முறை பிரதம மந்திரியாகவிருந்த ரணில் இதுவரைக்கும் தமிழருக்கென்று ஆற்றிய பணி என்ன? இன்று அவரது பண முகவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் வாக்குப் பிச்சை கேட்டு வலம் வருகிறார்கள்.

ஊடகவியலாளர் கேட்ட கேள்வி;

தாங்கள் சார்ந்த தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிப்பதாக கூறுகிறது .ஆனால் நீங்கள் சங்கை ஆதரிப்பதாக கூறுகிறீர்கள். மக்கள் யாருக்கு வாக்களிப்பது?

பதில்:
ஜனாதிபதி பொது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக்கட்சியினர் செயற்பாடு சங்கடங்களை தருகின்றது.

தமிழ் ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக்கட்சியினர் இரண்டாக பிரிந்து நிற்பது வடகிழக்கு தமிழர்களுக்கு சங்கடங்களை தருகின்றது.தமிழரசுக்கட்சி தலைமைகள் தளம்பல் நிலையில் இருந்தமையினால் உறுப்பினர்கள் பல்வேறு வேட்பாளர்களுக்கு ஆதரவளித்து வருகின்றார்கள்.இவ்வாறு பல உருவங்களாக பிரிவதற்கு தமிழரசுக் கட்சி தலைமைகள் விட்ட பிழையே காரணமாகும்.நாங்கள் இந்த அரசாங்கத்தில் எவரையும் நம்ப விரும்பவில்லை.இங்கு ஒரு இனப்பிரச்சினை இருக்கின்றது.எமது மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.எனவே எதிர்வரும் தேர்தலில் எமது கோரிக்கையானது சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதும் எமது ஒற்றுமையை உலகிற்கு பறைசாற்றுவதுமாகும் என குறிப்பிட்டார்.