ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று மாலை (11) இடம்பெற்ற கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொண்டார்.
கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கு.புஸ்பகுமார் (இனியபாரதி) தலைமையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு இடம்பெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நீதி அமைச்சர் அலிசப்ரி முன்னாள் அமைச்சர் தயாகமகே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை தவிசாளர்கள் உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் புஸ்பகுமார் (இனியபாரதி) ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டால் மாத்திரமே தமிழ் மக்கள் நினைத்ததை செய்யலாம். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அம்பாரை மாவட்ட தமிழ் மக்கள் யுத்தத்தில் மாத்திரமன்றி அரசியலிலும் பாதிக்கப்பட்டவர்கள். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு ஒரு கணக்காளரை கூட நியமிக்க முடியாத அரசியலோடு வாழ்க்கின்றவர்கள். ஆகவே நீங்கள் வெற்றி பெற்றதன் பின்னர் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து தருவீர்கள் என நம்புகிறோம் அதற்காக உங்கள் வெற்றிக்கு பாடுபடுவோம் என்றார்.
இங்கு உரையாற்றிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் … கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவு செய்தேன். இதேநேரம் கொழும்பில் ரணில் விக்கிரமசிங்கவோடு நமது இன்னாள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரகசியமான சந்திப்புக்களில் ஈடுபட்டு அவருக்கு ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். அவர்கள் பகலில் ஒரு கதை. இரவில் ஒரு கதை சொல்கின்றனர். இதை நாம் விடுத்து ஜனாதிபதியை ஆதரித்து அம்பாரை மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம் என்றார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன். கடந்த காலத்தில் பெண்கள் மனமுடைந்து எவ்வாறு வாழ்வது என மனவேதனையில் வாழ்ந்தனர். குடும்பத்தினை நடத்த எதுவுமே இல்லை. ஆனால் அதனை சில காலத்திலேயே மாற்றியமைத்த தலைவர் ரணில் விக்கிரமசிங்க. அதற்கு நன்றி கடன் செலுத்தும் முகமாக அவருக்கு வாக்களித்து மீண்டும் ஜனாதிபதியாக அவரை தெரிவு செய்வது இலங்கையில் வாழும் ஒவ்வொரு தனிமனிதனின் கடமை என்றார்.
அதிலும் அம்பாரை தமிழ் மக்கள் மிக கவனமாக வாக்கை பயன்படுத்தி எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தை மாத்திரமன்றி அம்பாரை மாவட்டத்தில் ஓர் அமைச்சரையும் பெற வேண்டும். இதற்காகவே நாங்கள் அனைவரும் ஒன்றாய் இணைந்துள்ளோம் என்றார்.
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என இதுவரை தீர்வு காண முடியாத இன்னமும் யாழ்ப்பாணத்தில் இருந்து சொல்லும் சிலரது கதையினை கேட்டு அழிவுக்கு செல்ல போகின்றோமா அல்லது. ஜனாதிபதியுடன் இணைந்து அம்பாரை மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய போகின்றோமா என குறிப்பிட்டார்.
ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில் அபிவிருத்தி பணிகளுக்காக நாம் மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு நாம் எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். அவர்களுக்கு நம்பிக்கையினை ஏற்படுத்த வேண்டும். இன்னும் 20 வருடங்களில் நல்லதொரு நாட்டில் வாழப்போகின்றோம் எனும் நம்பிக்கையினை ஊட்ட வேண்டும்.
முன்னால் இருக்கும் 5 வயது நிரம்பிய அக்குழந்தைக்கு 25 வயதாகும்போது நல்லதொரு நாட்டை உருவாக்கி கொடுப்பேன். அதற்காகவே உங்களிடம் வாக்கு கேட்கின்றேன். திருக்கோவில் மக்களுக்கு பலம் வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்கி கொடுப்போம். இங்கு விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வோம். இதனை சஜித் அனுரவால் ஏற்படுத்த முடியாது.
அவர்கள் வார்த்தைகளில் மாத்திரம்தான் கூற முடியும். ஆவர்கள் வந்தால் நிட்சயமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். ஆகவே 21ஆம் திகதி காஸ் சிலிண்டருக்கு வாக்களியுங்கள். அவ்வாறு இல்லையெனில் காஸ் சிலிண்டரும் இல்லை. திருக்கோவிலி;ல் பொருளதார அபிவிருத்தியும் இல்லை.