நமது முஸ்லிம் தலைமைகள் யாருடன் இருக்கிறார்களோ அந்த அணி தோற்பது உறுதி

கேஸ் இல்லாத நிலையில் பல்பொருள் அங்காடிகளில் கூட விறகுகள் விற்கப்பட்டன. விவசாயம் செய்வதற்கு உரம் இருக்கவில்லை. மத்திய வங்கியில் 20 மில்லியன் டொலர்கள் மட்டுமே இருந்தன. 20 மில்லியன் நாட்டு மக்களுக்கும் ஒரு டொலர் வீதம் வழங்குவதற்குக் கூட அது போதாது. ஆட்சியைப் பொறுப்பேற்பதற்காக சஜித் பிரேமதாசவுடன் உரையாடுமாறு அன்றிருந்த ஜனாதிபதி கோட்டாபய எனக்கு அறிவித்தார். நான் அவருடன் பேசினேன். அவர் கோரியதற்கு ஏற்ப மத்திய வங்கி ஆளுநர் மற்றும் திறைசேரி செயலாளருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் பெற்றுக் கொடுத்தேன். நாடு பயங்கரமான நெருக்கடியில் இருப்பதாக கூறி சஜித் பின்வாங்கினார். ஆனால் இன்று நாட்டை ஒப்படைக்குமாறு கோருகின்றனர். நாடு நெருக்கடியில் இருந்து மீண்டுள்ள நிலையில், நாம் பரீட்சார்த்தமாக வேறொருவருக்கு பொறுப்பைக் கொடுக்க போகிறோமா? என அமைச்சர் அலி சப்ரி கேள்வியெழுப்பினார்.

சாய்ந்தமருதில் கல்முனைத் தொகுதி ஐ.தே.க அமைப்பாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் தலைமையில் நடைபெற்ற இயலும் ஸ்ரீலங்கா பிரச்சார கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

1989 ,1994 மற்றும் 1999 இல் மாமனிதர் அஷ்ரப் யாருடன் இருந்தார்? நமது முஸ்லிம் தலைமைகள் யாருடன் இருக்கிறார்களோ அந்த அணி தோற்பது உறுதி. சமுதாயத்தை காட்டிக் கொடுக்கும் முஸ்லிம் தலைவர்களின் பின்னால் செல்ல வேண்டாம். நாம் சுயநலத்திற்காக அரசியல் செய்யவில்லை. கடந்த 5 வருட காலத்தில் அரசாங்கத்திற்குள் இருந்து நாம் செய்த போராட்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அது எனக்கு, இறைவனுக்கும் தான் தெரியும்.

இறந்தவர்களின் உடல்களை கட்டாயப்படுத்தி தகனம் செய்ய முடியாது என சட்டம் கொண்டு வரப்படுகிறது. கடந்த காலத்தில் செய்த தவறுக்கு அரசாங்கம் என்ற வகையில் மன்னிப்புக் கோரினோம். தெற்கிலுள்ள மக்களும், மலையக தமிழ் மக்களும் ஜனாதிபதியை வெல்ல வைக்க தயாராக உள்ள நிலையில், நாமும் அந்த வெற்றியில் பங்காளர்களாவோம்” என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைவர் அன்வர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஆளுநர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.