தலவாக்கலை லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தின் கிளனிகல்ஸ் பிரிவிலுள்ள வீடொன்றிற்கு அருகாமையில் இரவு வேளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் சிசு ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
சிசுவின் சடலம் துணியால் மூடப்பட்டு முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை (09) இரவு முச்சக்கரவண்டி நிறுத்தப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் இதனைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சிசு பிறந்து சில நாட்களே இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். சிசுவின் சடலத்தை கொண்டு வந்து முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் வைத்த நபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை எனவும் நுவரெலியா மாவட்ட நீதவான் நேற்று (10) சம்பவ இடத்திற்கு வந்து பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் சடலத்தை நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.