எதிர்வரும் 21 ம் திகதி தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாடம் புகட்டுவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
தலவாக்கலை நகரில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று (8) நடைப்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
எதிர்வரும் 21 ம் திகதி நாட்டின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறயிருக்கின்றது. சஜித் பிரேமதாச,ரணில் விக்கிரமசிங்க, அனுரகுமார திஸாநாயக்க ஆகிய மூன்று பேரில் நாம் சஜித் பிரேமதாசவையே தேர்ந்தெடுக்க வேண்டும். ஏனென்றால் சஜித் பிரேமதாச மிகவும் நேர்மையான மனிதர். மக்களின் கஸ்டங்களை நன்கு உணர்ந்தவர். அவரே கொடுக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் தலைவர்.
நாங்கள் 48 அம்ச கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்துள்ளோம்.கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நானும் மனோகணேசன், இராதாகிருஸணன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்து மக்களுக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து கொடுத்தோம். பல உரிமைகளை பெற்றுக் கொடுத்தோம். நான்கரை வருடத்தில் எங்களுடைய ஆட்சி முடிந்துபோன பின்பு 5 வருடங்கள் எதிர்கட்சியிலேயே இருக்கின்றோம்.இன்னும் 10 நாட்களில் சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவருடைய அரசாங்கத்தில் நாங்கள் மூன்று பேரும் அமைச்சர்களாகி மலையக மக்களுக்கு அபிவிருத்திகளையும் உரிமைகளையும் பெற்றுக்கொடுப்போம்.நான் சாதாரண தோட்ட தொழிலாளியின் பிள்ளை அதனால்தான் அமைச்சு பதவியை எடுத்து மக்களுக்கு நேர்மையாக வேலைசெய்ய கிடைத்தது.இந்திய அரசாங்கம் 10 ஆயிரம் வீடமைப்பு திட்டத்தை அமைக்க நிதியுதவி வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை ஒரு வீடு கூட எங்கும் கட்டப்படவில்லை.சஜித் பிரேமதாச ஜனாதிபதியானதும் இந்த 10 ஆயிரம் வீடுகளை 3 வருடங்களில் நிர்மாணித்து கொடுப்பேன். அதற்கான அனுபவம் என்னிடம் இருக்கின்றது.
மக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக சஜித் பிரேமதாச நிச்சயமாக மாற்றுவார். வீடுகளை கட்ட காணிகளை அவர் வழங்குவார். அந்த நாள் மிக விரைவில் வரும். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லயன்களை கிராமமாக மாற்ற போகின்றேன் என்கிறார். எங்களுக்கு நீங்கள் லயன்களை கிராமமாக மாற்ற தேவையில்லை.
எங்களுக்கு லயனே தேவையில்லை. ஐக்கிய தேசிய கட்சி காரர்களிடம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றாராம் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சியின் 90 % வீதமானோர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாகவே உள்ளனர். நான் கூறுகின்றேன் இந்த தேர்தலிலே நுவரெலியா மாவட்டத்தில் 2 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை சஜித் பிரேமதாச பெறுவார். இன்றைய கூட்டத்திலேயே 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துக்கொண்டிருக்கின்றார்கள். எனவே மக்களே எதிர்வரும் 21 ம் திகதி டெலிபோன் சின்னத்திற்கு வாக்களித்து சஜித் பிரேமதாசவை வெற்றி பெற செய்து இந்நாட்டின் ஜனாதிபதியாக்குங்கள் என்றார்.