கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு இத்தியடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய புனராவர்த்தன ஏக குண்டபட்ச அஷ்டபந்தன மகாகும்பாபிசேகம் இன்று( 06) காலை இடம்பெற்றது.
சுமார் 40 வருடங்களின் பின்னர் முதல் முறையாக இன்று காலை அமிர்தசித்த யோகமும் கன்னிலக்கினமும் கூடிய சுபநேரம் 6.45 முதல் 8.43 மணிவரையான சுபநேரத்தில் பெருந்திரளான அடியவர்கள் மத்தியில் கும்பாபிசே குடமுழுக்கு நடைபெற்றது.
கடந்த 04ஆம் திகதி கருமாரம்ப கிரியைகளோடு ஆரம்பமான கும்பாபிசேக கிரியைகள்; 05ம் காலை முதல் பிற்பகல் 4 மணிவரை இடம்பெற்ற எண்ணெய்க்காப்பு சாத்தும் வழிபாடுகளுடனும்; இன்று சுபநேரத்தில் இடம்பெற்ற கும்பாபிசேக குடமுழுக்கு பெரும்சாந்தியுடனும் இடம்பெற்றதுடன் 12 நாட்கள் மண்டலாபிசேக பூஜைகளும் நிறைவுறவுள்ளன.
இன்று காலை யாககுண்ட பூஜைகள் இடம்பெற்றதுடன் பிரதான கும்பம் வெளிவீதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பரிவார மூர்த்திகளுக்கும் சித்திவிநாயகப் பெருமானின் கலசத்திற்கும் கும்பம் சொரியப்பட்டது.
இதன் பின்னராக பிரதான கும்பம் சித்திவிநாயகப் பெருமானின் மீது அடியவர்களின் அரோகரா வேண்டுதலுக்கு மத்தியில் மங்கள வாத்தியம் முழுங்க இடம்பெற்றது.
அதிசயம் மிக்கதும் தன்னை நாடிவரும் அடியார்களின் வினைபோக்கி நல்லருள் புரிபவருமான சித்திவிநாயகப் பெருமானின் கும்பாபிசேக கிரியைகள் யாவும் பிரதிஷ்டா பூசனம் சிவாகமஜோதி சிவஸ்ரீ க.கு சீதாராம் குருக்கள் ஆசியுடன் சிவாகமபானு சிவஸ்ரீ சீதாராம கௌரிசங்கர் குருக்கள் தலைமையில் சீ.கு.கோவர்த்தன குருக்கள் ஆலய குரு சக்தி பூஜா விற்பன்னர் ரவீந்திரநாதன் உள்ளிட்ட குருமார்கள் இணைந்து கும்பாபிசேக கிரியைகளை நடாத்தி வைத்தமை சிறப்பாகும்.