மன்னார் மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் சென்று வெளியேறும் வைத்தியர் , பொறியியலாளர்கள் மன்னார் மாவட்டத்தில் சேவையாற்ற வேண்டும். இவ்வாறு பாடசாலைகளில் விளையாட்டில் சாதனைகள் படைத்து பாடசாலையை விட்டு வெளியேறும் வீரர்களை கழகங்கள் பயன்படுத்தி மன்னார் சாதனை படைக்கும் மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டும் என பிரதி கல்விப் பணிப்பாளர் பி.ஞானராஜ் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் யாழ் துரையப்பா விளையாட்ட அரங்கில் இடம்பெற்றதில் மன்னார் கல்வி வலயம் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் முதல் இடத்தை பிடித்ததை முன்னிட்டு வீரர்கள் மன்னார் கல்வி வலயத்தினால் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு செவ்வாய் கிழமை (02) நடைபெற்றது
இதன்போது மன்னார் கல்வி வலய பிரதிப் பணிப்பாளர் பி.ஞானராஜ் தொடர்ந்து உரையாற்றுகையில்
எங்களுடைய மாணவ வீரர்களின் திறமையும் சாதனையும் கௌரவிக்கும் முகமாக நாம் இன்று (02) ஒன்று கூடியுள்ளோம்.
இந்த வீரர்கள் தங்கள் இரத்தத்தை வியர்வையாக சிந்தியே எமது மன்னார் மாவட்டத்துக்கு பெருமையை ஈட்டித் தந்துள்ளனர்.
இவர்கள் மிகவும் கட்டுக் கோப்பானவர்கள். ஒழுக்கம் நிறைந்தவர்களாக காணப்படுகின்றனர்.
இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் நிலைத்து நின்று , தனித்து நின்று தாங்களாகவே வாழக்கூடியவர்கள்.
விளையாட்டுகளிள் ஈடுபடுபவர்கள் கல்வியில் ஆர்வம் குறைந்து காணப்படுவர் என பலர் குறிப்பிடுகின்றனர். இது ஒரு அப்பட்டமான பொய்யாகும்.
கல்வியில் ஆர்வம் காட்டுபவர்களே விளையாட்டுகளில் வீரர்களாக திகழ்கின்றனர். கல்வியில் சித்தியடைகின்றனர். அத்துடன் பல துறைகளில் மிளிர்கின்றனர்.
மன்னார் மாவட்டத்தை பொறுத்தமட்டில் பல்கலைக் கழகம் செல்பவர்கள் பலர் விளையாட்டு வீரர்களாக திகழ்ந்து காணப்படுகின்றனர்.
விளையாட்டில் ஈடுபடுபவர்களை விட ஈடுபடாதவர்கள்தான் கல்வியில் நாட்டம் குறைவாக காணப்படுவது கடந்த கால ஆய்வாக இருக்கின்றது.
இந்த வகையில் வட மாகாணத்தில் எமது மன்னார் மாணவர்கள் எந்த வலயமும் காண்பிக்காத முறையில் ஒழுக்கம் உள்ளவர்களாக மாணவர்களுக்கேற்ற தன்மையில் இருந்தமை விளையாட்டு போட்டிகள் நடைபெற்ற இடத்தில் பலராலும் பாராட்டப்பட்டவர்கள்.
உண்மையில் இவர்களுடைய விளையாட்டுக்கள் மட்டுமன்றி ஒழுக்கச் சீறுள்ளவர்களாக இருந்தமைக்கு எமது கல்வி வலயப் பணிப்பாளர் , உத்தியோகத்தர்கள் , பாடசாலை அதிபர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர் மற்றும் மாணவர் யாவரையும் நாம் மறந்துவிட முடியாது.
இங்கு நான் ஒரு ஆதங்கத்தையும் குறிப்பிட விரும்புகின்றேன். 18 மற்றும் 20 வயது மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் பாடசாலைகளை விட்டு வெளியேறுகின்றனர்.
இவர்கள் எங்கே செல்லகின்றனர்? கழகங்களுக்கு இடையே நடைபெறுகின்ற போட்டிகளில் மன்னார் மாவட்டம் முதல் இடத்தை பிடிக்க முடியாது திண்டாடுகின்றது.
பாடசாலை மட்டங்களில் சாதித்து மிக திறமையாக வெளியேறும் இவர்கள் கழகங்களில் பங்குபற்றுவது இல்லையா? அல்லது இவர்களை கழகங்கள் இணைத்துக் கொள்வது இல்லையா என்பது கேள்விக் குறியாக இருக்கின்றது.
இதையிட்டு நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். கடந்த காலங்களில் வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களை கொண்ட வட மாகாணத்தில் மன்னார் மாவட்டம் ஐந்தாவது மாவட்டமாகவே காணப்படுகின்றது.
இவ்வாறு மன்னாரிலிருந்து பல்கலைக்கழகம் செல்லுபர்சளும் மீண்டும் மன்னாருக்கு திரும்பி வந்து சேவை செய்வதில் குறைவாகவே தெரிகின்றது.
இது எமது மாவட்டத்துக்கு ஒரு கேள்விக் குறியாகவே இருக்கின்றது. வெளி மாவட்டங்களைச் சார்ந்தவர்களே இங்கு வந்து சேவையாற்றுவதையே நாம் பார்க்கின்றோம்.
ஆகவே மன்னார் மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகம் சென்று வெளியேறும் வைத்தியர் , பொறியியலாளர்கள் மன்னார் மாவட்டத்தில் சேவையாற்ற வேண்டும்.
இவ்வாறு பாடசாலைகளில் விளையாட்டில் சாதனைகள் படைத்து பாடசாலையை விட்டு வெளியேறும் வீரர்களை கழகங்கள் பயன்படுத்தி மன்னார் சாதனை படைக்கும் மாவட்டமாக உருவாக்கப்பட வேண்டும் என வேண்டி நிற்கின்றேன் என பிரதி கல்விப் பணிப்பாளர் பி.ஞானராஜ் இவ்வாறு தெரிவித்தார்.