அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் உயர்தரப் பிரிவில் தொடர்பாடலும் ஊடகக் கற்கை பாடத்தினை பயின்று வரும் மாணவர்கள் மத்தியில் புகைப்படக் கலையினை விருத்தி செய்யும் நோக்கில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசாரப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட செயன்முறைப் பயிற்சி கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அதிபர் ஏ.எச்.பௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது பிரதேச செயலாளர் ரி.எம்.எம்.அன்சார் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். உதவி பிரதேச செயலாளர் வை.ராசித், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி.முகம்மட் ரின்சான், மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.நவப்பிரியா, பாடசாலையின் உயர் தரப் பிரவு வலயத் தலைவர் எம்.ஐ.எல். பைஷல், அபிவிருத்தி உத்தியோகத்தர் பர்ஷானா சம்சுதீன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இதன்போது கலந்து கொண்டனர்.
காலத்திற்கு ஏற்ப மாணவர்களின் துறைசார் தேவைகளை கருத்திற் கொண்டு கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் ஆகியன இணைந்து அக்கரைப்பற்று தேசிய பாடசாலை மாணவர்களுக்கு இப்பயிற்சியினை வழங்க முன்வந்தமை தொடர்பில் இப்பாடசாலையின் அதிபர் தலைமையிலான ஆளணியினரும், கல்விச் சமூகத்தினரும் தமது நன்றியறிதலை தெரிவிக்கின்றனர்.
இதன்போது அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் பாடத்தினை பயின்று வரும் சுமார் நூறு மாணவர்கள் கலந்து கொண்டு புகைப்படக் கலை தொடர்பிலான பயிற்சியினை பெற்றுக் கொண்டனர்.
புகைப்படக் கலை தொடர்பான சிறந்த அறிவும் அனுபவமும் கொண்ட வளவாளரான ஐ. ஹாதி ஹசன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு புகைப்படக் கலை தொடர்பான விளக்கங்களையும் செயன்முறைப் பயிற்சிகளையும் மாணவர்களுக்கு வழங்கினர்.
புகைப்படத்துறையின் நுட்பங்கள், புகைப்படத்துறை வரலாறு, புகைப்படத்துறைப் பிரிவுகள் மற்றும் புகைப்படக் கலைத்துறையில் கையாள வேண்டிய அம்சங்களும் நடைமுறைகளும் போன்ற பல்வேறு விடயங்கள் கோட்பாடு ரீதியாகவும் செயன்றைகள் மூலமாகவும் இதன்போது மாணவர்களுக்கு தெளிவு படுத்தப்பட்டகை குறிப்பிடத்தக்கது.