அக்கரைப்பற்றில் இடம்பெற்ற தபால் மூலமான வாக்களிப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று இடம்பெற்றது. இன்றைய தினம் ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் போன்றோர் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கீழுள்ள பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் போன்றோர் தாபல் மூல வாக்களிப்பில் மும்மூரமாக ஈடுபட்டதனை அவதானிக்க முடிந்தது.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் ஏற்படுத்தப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் சுமார் 50 ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா உத்தியோகத்தர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். காலை 8.30 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமானது. கல்லூரி அதிபரும் கல்வி நிருவாக சேவை அதிகாரியுமான ஏ.எச்.பௌஸ் தலைமையில் வாக்களிப்பு இடம்பெற்றது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தின் கீழ் இம்முறை 746 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கான தகுதியினைப் பெற்றுள்ளனர். இதற்கமைவாக, அக்கரைப்பற்று கல்விக் கோட்டத்தில் 250 பேரும், அட்டாளைச்சேனை கல்விக் கோட்டத்தில் 260 பேரும், பொத்துவில் கல்விக் கோட்டத்தில் 236 பேரும் தபால் மூல வாக்ககளிப்பிற்கென தகுதி பெற்றிருந்தனர்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் நாடு தழுவிய ரீதியில் ஏழு இலட்சத்து 12 ஆயிரத்து 319 பேர் தபால் மூலம் வாக்களிப்பதற்கென தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் 54 ஆயிரத்து 858 பேர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் 26 ஆயிரத்து 778 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 116 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 14 ஆயிரத்து 964 பேரும் அஞ்சல் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.