விளையாட்டு துறைசார் நிபுணர்களின் ஆலோசனை பெறப்படாமல் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கரப்பந்தாட்ட மைதானத்தின் சுற்று வேலியும் கரப்பந்தாட்ட இரும்பு கம்பியும் துருப்பிடித்து அழியும் நிலைக்கு உள்ளாகி வருகின்றது.
நாட்டின் சகல பகுதிகளிலும் இலங்கையின் தேசிய விளையாட்டான கரப்பந்தாட்டத்தை பிரபல்யம் படுத்தும் வகையில் கிராமத்திற்கு ஒரு கரப்பந்தாட்ட மைதானம் அமைக்கும் திட்டத்தில் அடிப்படையில் சாய்ந்தமருதில் இம் மைதானம் அமையப் பெற்றுள்ளது
சாய்ந்தமருதில் கரப்பந்தாட்ட மைதானத்தை அமைப்பதற்கு பொருத்தமான இடம் இருந்தும் மிகவும் நெருக்கமான இடத்தில் தற்போதய மைதானம் அமைய பெற்றுள்ளது.
சூரிய ஒளியின் தாக்கத்தை தவிர்க்க வடக்கு தெற்காக அமைய வேண்டிய மைதானம் கிழக்கு மேற்காக அமைய பெற்றுள்ளதால் காலையிலும் மாலையிலும் இம்மைதானத்தை பயன்படுத்த முடியாதுள்ளதாக விளையாட்டு துறைசார் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே வேளை கரப்பந்தாட்டம் விளையாடும் எல்லை சீமெந்து கட்டாக அமைந்திருப்பதால் விளையாடும் போது வீரர்கள் உபாதைக்குள்ளாகும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.
மக்களின் பாவனைக்கு இன்னும் கையளிக்கப்படாத இம் மைதானத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமெடுத்து பொருத்தமான இடத்தில் அமைக்குமாறு பிரதேச விளையாட்டு வீரர்கள் கேட்டுள்ளனர்.