அம்பாறை மாவட்ட தேர்தல் செயற்பாடுகளுக்கு மு.கா தலைவரினால் விசேட குழு நியமனம்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக அம்பாறை மாவட்டத்தில் சகல செயற்பாடுகளையும்
முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமினால் விசேட குழு ஒன்று நியமனம் செய்யப்பட்டடுள்ளது.
இக்குழுவின் தலைவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல். அப்துல் மஜீத் நியமிக்கப்பட்டுள்ளதுடன் உறுப்பினர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளரும், முன்னாள் கல்முனை மாநகர பிரதி மேயருமான றஃமத் மன்சூர், பிரதி செயலாளர் மன்சூர் ஏ காதர், பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை, முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளரும் முன்னாள் கல்முனை மாநகர மேயருமான சிறாஸ் மீராசாகிப், அரசியல் மற்றும் சமைய விவகார இணைப்பாளர் எம்.ரீ. சப்றாஸ், உச்சபீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயற்குழுவின் செயலாளருமான ஏ.சீ. சமால்டீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இக்குழு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சகல செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இக்குழுவுக்கு அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சகல உச்சபீட உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் பிரதி தலைவர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், பிரமுகர்கள் மற்றும் போராளிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.