தினமும் சொற்பொழிவுடன் களைகட்டும் பாலையடி வாலவிக்னேஸ்வரரின் திருவிழா

வரலாற்றுப்பிரசித்தி பெற்ற காரைதீவு பாலையடி வால விக்னேஸ்வரர் ஆலய வருடாந்த மஹோற்சவத்திருவிழா தினமும் சொற்பொழிவுடன் களைகட்டி வருகிறது.

மகோற்சவ கொடியேற்றம் கடந்த 29ஆம் தேதி வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

மஹோற்சவ குருவான சுவிட்சர்லாந்து தூண் ஸ்ரீ வரசக்தி விநாயகர் ஆலய பிரதம குரு கிரியாதிலகம் சிவஸ்ரீ சிவ பிரபாகர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் திருவிழாவை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

நேற்று முன்தினம் இரண்டாம் நாள் திருவிழா வண்ணக்கர் க.சுபரெத்தினம் முன்னிலையில் நடைபெற்றது.

உதவிக் கல்விப் பணிப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான விபுலமாமணி வித்தகர் வி.ரி.சகாதேவராஜா பிள்ளையார் பிறந்த வரலாறு தொடர்பாக சொற்பொழிவாற்றினார்.

இதேவேளை நேற்று 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி இடம்பெற்றது.

வரலாற்றில் முதல் தடவையாக கொணரப்பட்ட 21 அடி உயர சித்திரத்தேர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெள்ளோட்டம் விடப்படும்.மறுநாள் கன்னித் தேரோட்டம் செப்டம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு இடம்பெற இருக்கிறது .மறுநாள் எட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவம் இடம்பெறும் என்று ஆலய பரிபாலன சபைத் தலைவர் இ. தவராஜா தெரிவித்தார் .