அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகவும் முன் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸதீன் எச்சரிக்கை(28) விடுத்துள்ளனர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்திற்குட்பட்ட சாய்ந்தமருது, கல்முனை,மருதமுனை, பாண்டிருப்பு, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை அக்கரைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் மற்றும் இறக்காமம் ஆகிய பிரதேசங்களில் அதிகளவிலான நுளம்புப் பெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குமாறும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் திடீரென இடைவிட்ட மழை காலம் ஆரம்பித்துள்ளதாலும் ,கடும் வெயில் எரிப்பதனாலும் டெங்கு நுளம்பு பெருகுவதற்கு சாதகமான சூழலை தோற்றுவிக்கக்கூடும் என்ற காரணத்தினால் பிரதேச மக்கள் தங்களது வீடு மற்றும் சுற்றுப்புற சூழல் , நீர் தேங்கி நிற்கும் பொருட்கள் , நீர் தேங்கும் இடங்கள் , வெற்று வளவுகள் , கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தோணி , படகு போன்ற இடங்கள் குறித்து அவதானத்துடன் தொழிற்படுமாறும் பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொதுமக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை மக்கள் வசிக்கும் குடியிருப்பு பிரதேசங்களில் உள்ள வடிகான்களில் நீண்ட காலத்திற்கு கழிவுநீர் தேங்கியுள்ளதாகவும் இது குறித்து கல்முனை மாநகரசபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.