அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறான யானைக் கூட்டங்கள் திடிரென சம்மாந்துறை ஊடாக காரைதீவு மாவடிப்பள்ளி, நிந்தவூர் பகுதிகளை ஊடறுத்து வருகை தந்துள்ளன.இதன் போது குறித்த யானைகள் அங்குள்ள புல் இனங்களை உண்ணுவதுடன் கூட்டத்தில் உள்ள யானை குட்டிகள் விளையாடுவதையும் காண முடிந்தது.
மேலும் குறித்த யானைக்கூட்டத்தை பார்வையிட மாவடிப்பள்ளி பாலம், காரைதீவு இநிந்தவூர் ,சம்மாந்துறை ,பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து நின்று யானைக்கூட்டத்தை அவதானிப்பதை காணமுடிகிறது.
இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 150க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் யானைகள் கணக்கெடுப்பை நடத்த வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் நடாத்தி இருந்தது.குறித்த கணக்கெடுப்பானது 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.இறுதியாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த நாட்டின் காடுகளில் 5000 முதல் 6000 யானைகள் இருப்பதாக வனவிலங்கு அதிகாரிகள் கூறியுள்ளனர்.பொதுவாக இலங்கையில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன் பின்னர்இ வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் யானைகள் கணக்கெடுப்பை 2021இல் நடத்த திட்டமிட்டிருந்த போதிலும்இ கோவிட் தொற்றுநோய் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.நாடளாவிய ரீதியில் 3130 நிலையங்களில் யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
நாட்டில் வாழும் யானைகளின் முழுமையான எண்ணிக்கையை உறுதிசெய்துகொள்ளக்கூடிய வகையில் நாடளாவிய ரீதியில் தரவுகள் மற்றும் தகவல்களை புதுப்பிக்க 2011 ஆம் ஆண்டின் பின்னர் யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதனால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.யானைகளுக்கான புதிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்குதல், தற்போதுள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்துதல், யானை – மனித மோதலை தடுப்பதற்கான மூலோபாய திட்டங்களை தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல், வளர்ச்சி நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துதல் ஆகியவை இந்த கணக்கெடுப்பின் முக்கிய நோக்கங்களாகும்.
ஆசியாவில் யானைகள் வாழும் குறிப்பிட்ட சில நாடுகளில் ஒன்றாகவுள்ள இலங்கையில் யானைகளின் பாதுகாப்பு தேசியக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் சர்வதேச பாதுகாப்பு முயற்சிகளுக்கு அமைவாக அதனை நாட்டின் பொறுப்பாக உருவாக்கியுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.