ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம் (24) மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் பெரும் திரளான மக்கள் ஆதரவுடன் இடம்பெற்றது.
குறித்த தேர்தல் பிரச்சார கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசன் துரை சந்திரகாந்தன் உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் குறித்த தேர்தல் பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் குறித்த தேர்தல் பிரச்சாரத்தில் தலைமை உரையாற்றிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் வெளியிட்ட கருத்தானது மூவின மக்களும் ஒற்றுமையாக வாழுகின்ற கிழக்கு மாகாணத்தை “ஒரு தமிழன் தான் ஆள வேண்டும்” “கிழக்கு எங்களுடையது”என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டு தமது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்ததாக அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இவ்வாறு தமது இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்ள பிரச்சார மேடைகளில் இவ்வாறு இனவாத கருத்துக்கள் மூலம் சமூக நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டமை தேர்தல் விதிமுறைகளை மீறும் செயல் எனவு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான சர்ச்சைக்குரிய கருத்துக்களின் மூலம் கிழக்கு மாகாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கிடைக்கும் வாக்குகள் கேள்வி குறியாக்கப்படலாம் என அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.