(துறைநீலாவணை நிருபர்) நாட்டினை சிறந்த முறையில் பொருளாதார கட்டமைப்புக்கு ஏற்ற வகையில் வழிநடாத்திச் செல்லக்கூடிய தலைவரை தெரிவு செய்வது மக்களின் கடமையாகும்.அதற்கான சந்தர்ப்பம் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களில் சிறுபான்மை மக்கள் விட்ட தவறினை இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் விடக்கூடாது சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டு மாவட்ட அமைப்பாளர்கள் இணைப்பாளர்கள், முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் மட்டு மாவட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சரும் தற்போதைய ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் முன்னாள் அமைச்சர் அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதுதீன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட முகாமையார் சிறிதரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அவர் மேலும் தெரிவிக்கும் போது இந்த நாட்டில் பல தலைவர்கள் ஆட்சி அதிகாரங்களை கைப்பேற்றிய போதிலும் சிறுபான்மை மக்களின் தீர்வு விடயங்களில் இழுத்தடிப்புத் நோக்கத்துடன் செயற்பட்ட வரலாறுகள் இருக்கின்றன இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலை எதிர் கொள்ள இருக்கின்றோம். பல வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியிருக்கின்றனர்.இவ்வாறான நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுகின்ற சஜித் பிரமதாச அவர்களை அதிகபடியான வாக்குகளினால் வெற்றி பெறச் செய்ய வேண்டிய தார்மீக பொறுப்பு சிறுபான்மை மக்களின் கரங்களில் தங்கியிருக்கின்றது.இது தொடர்பாக மக்களிடம் தெளிவூட்ட வேண்டிய பொறுப்புக்கள் அனைத்தும் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் துரிதமான முன்னெடுப்புக்களில் தங்கியுள்ளது.
புதியதொரு ஜனாதிபதியிடம் நாட்டினை கையளிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டினை நவீன யுகத்திற்கு ஏற்ற வகையில் கொண்டு செல்ல முடியும். நாட்டினை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி நோக்கியதாகக் கொண்டு செல்லக்கூடிய தலைமைத்துவம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமாகிய சஜித் அவர்களிடம் மாத்திரமே இருக்கின்றது.இந் நிலையில் சிறுபான்மை மக்கள் ஒற்றுமையோடு செயற்பாட்டால் வெற்றி இலக்கினை அடைய முடியும் எனத் தெரிவித்தார்.