அனுர குமார திசாநாயக்கவினை பற்றி கூற தேவையில்லை.மோசமான இனவெறி கொண்ட ஒருவர்.இறுதிப் போரில் ஒன்று அரை இலட்சம் தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி இராணுவத்திற்கு கொடுத்திருந்த ஒரு கொலைவெறி பிடித்த குழு ஒன்றின் தலைமைச்சக்தியாக அவர் இருக்கின்றார்.அது மாத்திரமன்றி வடக்கு கிழக்கினை வழக்கு தாக்கல் செய்து பிரித்த இனவெறியர்கள் இவர்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சனிக்கிழமை (24) அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு தெளிவூட்டும் துண்டு பிரசுரம் வழங்கும் செயற்பாட்டில் ஈடுபட்டவேளை ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது
75 வருடங்களாக தமிழருக்கு உரிமை வழங்க மாட்டோம் என்று பேரினவாதிகள் கூறி வருகின்றார்கள்.குறிப்பாக பேரினவாதிகள் சிங்கள மக்களுக்கு இவ்வாறாக கருத்துக்களை கூறி வருகின்றார்கள்.அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இது ஒரு பௌத்த நாடு.சிங்கள நாடு.இதை பேணிப் பாதுகாப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.அது மட்டுமன்றி வடகிழக்கில் 1000 பௌத்த விகாரை அமைப்பதாகவே கூறி வருகின்றனர்.சஜீத் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமும் அவ்வாறு தான் இருந்திருக்கின்றது.சஜீத் பிரேமதாச அவர்கள் புத்தசாசன அமைச்சராக இருந்த போது நீராவியடி பிள்ளையார் ஆலய முற்றத்தில் ஒரு பௌத்த பிக்குவின் சவம் எரிக்கப்பட்டது.இவ்விடயம் அமைச்சரின் ஆலோசனை வழிகாட்டலுடன் தான் நடைபெற்றது.இது தவிர அவரது காலத்தில் தான் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் சட்டவிரோத விகாரை கூட கட்டப்பட்டிருந்தது.
அனுர குமார திசாநாயக்கவினை பற்றி கூற தேவையில்லை.மோசமான இனவெறி கொண்ட ஒருவர்.இறுதிப் போரில் ஒன்று அரை இலட்சம் தமிழர்களை அழித்து ஒழிப்பதற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி இராணுவத்திற்கு கொடுத்திருந்த ஒரு கொலைவெறி பிடித்த குழு ஒன்றின் தலைமைச்சக்தியாக அவர் இருக்கின்றார்.அது மாத்திரமன்றி வடக்கு கிழக்கினை வழக்கு தாக்கல் செய்து பிரித்த இனவெறியர்கள் இவர்கள்.இவர்கள் எல்லோரது நிலைப்பாடுகளும் இவைகள் தான்.இதில் நாமல் ராஜபக்ஸ விதிவிலக்கானவரல்லர்.இதனால் தான் இவர்களிடம் தமிழருக்கு உரிமை கொடுக்க போகின்றோம் என கூறினால் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எழுதி உங்களின் சிங்கள மக்களிற்கு சொல்லுங்கள்.இந்த தோல்வியடைந்த ஒற்றையாட்சியினை ஒழிக்க போகின்றோம்.சமஸ்டியை கொண்டு வரப் போகின்றோம் என்பதை தேர்தல் விஞ்ஞாபனத்தின் ஊடாக வெளிப்படுத்தி வாருங்கள் என நாங்கள் கூறுவது நம்பிக்கைக்காக தான்.
இது தவிர இன்று நேற்று முளைத்த காளானாக இருக்கின்ற இந்த நாமல் ராஜபக்ஸவிற்கு சமீப காலமாக பல கருத்துக்களை குறிப்பிடும் துணிச்சலை கொடுத்தது சுமந்திரன் ,சம்பந்தன், அரியநேந்திரன் ,சிறிதரன், உட்பட இந்த தமிழரசு கட்சியின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு 2010 ஆண்டு 2015 , 2020 ஆண்டு வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுப் பேரும் பொறுப்பேற்க வேண்டும்.விக்னேஸ்வரனும் முழுப்பொறுப்பினையும் ஏற்க வேண்டும்.ஏனெனில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு குற்றவியல் விசாரணைகளை நடாத்துவதற்கான அதிகாரங்கள் இல்லை என்பது நன்றாக தெரிந்த பிற்பாடும் தொடர்ச்சியாக உள்ளக விசாரணைக்குள் பொறுப்பு கூறலை முடக்கி சர்வதே விசாரணை வேண்டாம்.இனப்படுகொலையாளிகளை பாதுகாப்பதற்காக மேற்கூறியவர்கள் ஒவ்வொருவரும் கூட்டாக செயற்பட்டு வந்தவர்கள்.குறிப்பாக இந்த இனப்படுகொலையாளி கோட்டபாய ராஜபக்ஸ 2019 ஆண்டு பதவியேற்ற பிற்பாடு ஜனாதிபதியாக இருக்கின்ற போது 2021 ஆண்டு மார்ச் மாதம் இலங்கை தொடர்பாக ஒரு தீர்மானம் வந்த நிலையில் அந்த சந்தர்ப்பத்தில் வந்து பொறுப்புக்கூறல் செயல்பாட்டை மனித உரிமை பேரவையில் இருந்து வெளியே எடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என முயற்சியை எங்கள் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் உட்பட எங்களது கட்சி முக்கியஸ்தர்கள் முன்னெடுக்கின்ற போது இவர்கள்(தமிழரசுக்கட்சியினர்) கடிதம் எழுதி ஜெனிவா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்படவுள்ள விடயம் எந்த வடிவத்தில் ஏனும் நிறைவேற்றப்பட வேண்டும் .
ஏனெனில் இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் தீர்மானம் ஒன்று தேவை என்பதாகும்.இவ்வாறாக இவர்கள் கொடுத்த ஆதரவு தான் நாமல் ராஜபக்ஸ போன்றவர்களுக்கு இவ்வாறான திமிரினை கொடுத்திருக்கின்றது.அது மட்டுமன்றி நாமல் ராஜபக்ஸ சீன சார்பானவர் என்பதனால் ஊடகங்கள் அவரது கருத்துக்களை பெரிது படுத்துகின்றன.அது மட்டுமன்றி 2010 ஆண்டு தமிழரசு கட்சியினர் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க சொன்னதை மறக்க முடியுமா.ஆகவே எமது மக்கள் இவ்வாறானவர்களை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
1920 ஆண்டு முஸ்லீம்களிற்கு எதிரான படுகொலையில் ஈடுபட்டமைக்காக பிரித்தானியாவில் வழக்கு போடப்பட்டிருந்தது.அந்த வழக்கில் இலங்கையில் இருந்து சென்ற தமிழ் தலைவர்கள் வாதாடி அந்த சிங்கள தலைவர்களை மீட்டு கொண்டு வந்த போது அந்த நன்றி கடனுக்காக கொழும்பிற்கு வந்திறங்கிய இந்த தமிழ் தலைவர்களை குதிரை வண்டிலில் ஏற்றி குதிரைகளை கழற்றி விட்டு பண்டார நாயக்க உள்ளிட் சிங்கள தலைவர்கள் குதிரைகள் போன்று தோளில் வைத்து வண்டிகளை இழுத்து சென்றார்கள். அந்தளவிற்கு தமிழர்களுக்கு சிங்கள தலைவர்கள் கடமைப்பட்டு இருந்தார்கள்.பயந்து கொண்டிருந்தார்கள்.ஆனால் இன்று ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களை தமிழ் தலைவர்கள் என்று சொல்கின்ற அடிமைகள் ஜெனிவா வரை சென்று சர்வதேச விசாரணையின்றி மீட்டு இருக்கின்ற நிலையில் இன்று எம்மை சிங்கள மக்கள் துரத்தி துரத்தி அடிக்கின்றார்கள்.எனவே எமது மக்கள் சிந்திக்க வேண்டும்.எமது வாக்குகளை பெற இன்று பொது வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றார்களா ? இவ்வாறானவர்கள் தான் அரசுடன் பேரம் பேசுவார்களா?என்பதை எமது மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் என செல்வராஜா கஜேந்திரன் குறிப்பிட்டார்.