மன்னாரில் இதுவரைக்கும் 228 டெங்கு நோயாளர்கள்

மன்னாரில் டெங்கு தொற்று நோய் அபாயம் வழமையைவிட இவ்நடப்பு ஆண்டு முன்னமே ஆரம்பித்துள்ளமையால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நோயின் அறிகுறி தெண்பட்டால் உடன் வைத்தியரை நாடும்படி மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வைத்திய அதிகாரி கதிகாமநாதர் சுதாகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வைத்திய அதிகாரி கதிகாமநாதர் சுதாகர் தெரிவிக்கையில்

மன்னாரில் இது வரைக்கும் 228 நபர்கள் டெங்கு நோய்யாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இத் தொகை சென்ற ஆண்டுடன் (2023) ஒப்பிடும்போது இந்த ஆண்டு (2024) இது வரைக்கும் சிறிதளவு அதிகமாகக் காணப்பட்டாலும் வழமையாக ஒக்டோபர் மாதத் தொடக்கத்திலேயே டெங்கு அபாயம் ஏற்படுவது வழமையாக காணப்பட்டு வந்தது.

ஆனால் இந்த வருடம் டெங்கு அபாயம் மன்னாரில் நேரத்துடனே ஏற்பட்டுள்ளது.

ஆகவே ஒவ்வொருவரும் இந்நோய் தங்களை பீடிக்காதிருக்க மிக அவதானமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு வருகின்றது.

நீடித்தக் காய்ச்சல் கண்ணுக்குப் பின்னால் நோவு போன்ற விடயங்கள் காணப்படுமாகில் தகுந்த வைத்தியரிடம் ஆலோசனைகளைப் பெற்று தேவையேற்படுமாகில் இரத்தப் பரிசோதனைக்கும் தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இது தொடர்பாக அரச வைத்தியசாலையை நாடுவது சிறந்தது ஒன்றாகும் எனவும்,

தற்பொழுது டெங்கு நோய் காணப்படும் இடமாக நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் வங்காலையும் மன்னார் நகரம் பிரதேச செயலகப் பிரிவில் சாவக்கட்டு பிரதேசமும் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.