ஒலிம்பிக் போட்டியில் ‘வூசு”WUSHU நிகழ்வில் தங்கப் பதக்கம் பெறுவது எனது எதிர்கால இலட்சியமாகும் .
இவ்வாறு தாய்லாந்தில் வூசு WUSHU என்ற வொக்ஷிங் ( boxing) போட்டியில் தங்கம் வென்ற கம்பளை வீரர் கணேசன் சுதாகரன் தெரிவித்தார்.
தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய ‘வூசு’ (WUSHU) போட்டியில் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளையைச் சேர்ந்த கணேசன் சுதாகரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.
கம்பளையைச் சேர்ந்த அதிபர்களான கணேசன்- புவனேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது புத்திரன் சுதாகரன் ஈட்டிய கடல் கடந்த ஆசிய சாதனை தொடர்பாக பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது .
இந்த சர்வதேச சாதனை காரணமாக இலங்கை வான்படையில் அவருக்கு தொழிலும் கிடைத்துள்ளது.
சுதாகரனின் தந்தை தங்கையா கணேசன் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் 1991/92 காலப் பகுதியில் விஞ்ஞான பயிற்சி ஆசிரியராக இருந்தவர். தற்பொழுது புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபராக இருக்கிறார். அவரது புதல்வரின் இந்த சர்வதேச சாதனையை பாராட்டு முகமாக மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் 91/ 92 புலன அணியினர் அதன் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை ( 10) கம்பளைக்கு சென்று அவரது இல்லத்தில் பாராட்டை நிகழ்த்தினர்.
வாழ்த்தினர்.
இலங்கை வான்படையில் பணியாற்றும் மிக இள வயது(22) தமிழ் இளைஞரான கணேசன் சுதாகரன் மும் மொழியிலும் தேர்ச்சி பெற்றவராவார்.
கம்பளையில் அவரது இல்லத்தில் அவரிடம் செவ்வி காணப்பட்டது.
தங்கள் ஆரம்பகாலம் பற்றி கூறுங்கள்?
நான் கம்பளையில் பிறந்தேன். எனக்கு வயது 22 எனது தந்தையார் கணேசன் அவர் புசல்வாவ சரஸ்வதி மத்திய கல்லூரி அதிபர் மற்றும் தாய் புவனேஸ்வரி. அவர் மாவத்துறை கலைமகள் வித்தியாலய அதிபராக இருக்கின்றார். எனக்கு ஒரு தங்கையும் தம்பியும் இருக்கின்றார்கள் .
கல்வி நிலை பற்றி கூறுங்கள்?
நான் ஆரம்பக் கல்வியை கம்பளை இந்து கல்லூரியில் பயின்றேன். பின்னர் ஆறாம் தரத்திலிருந்து உயர்தரம் வரை கண்டி கன்னொறுவை றணவிம றோயல் கல்லூரியில் பயின்றேன். அப்பொழுது எனக்கு இந்த தாய்லாந்து இடம் பெற்ற ஆசிய பூசு போட்டியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது .
அது பற்றி கூறுங்கள்?
நாங்கள் இலங்கையிலிருந்து 14 பேர் அங்கு சென்றிருந்தோம். அங்கு எனக்கு முதலிடம் கிடைத்தது. தங்கப்பதக்கமும் கிடைத்தது. மகிழ்ச்சி அளித்தது.
அதை தொடர்ந்து இலங்கை வந்த போது அரசாங்கமும் எமது சமூகமும் பெரிய வரவேற்பளித்தன. அவை என்னை பெரிதும் ஊக்கப்படுத்தியது.
பின்னர் என்ன நடந்தது?
இலங்கை வான்படைக்கு விண்ணப்பித்தேன். அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த பொழுதிலும் அங்கு 200 பேர் தெரிவானார்கள். அவர்களுள் தமிழரான நானும் தெரிவு செய்யப்பட்டேன். அதற்கு தங்கப்பதக்கம் பெரிதும் உதவியது.
Aircraft man என்கின்ற பதவியில் நான் இருக்கின்றேன். இலங்கை வான்படை அணிக்காக விளையாடுகிறேன். அத்துடன் பயிற்சியிலே ஒரு பயிற்றுவிப்பாளராகவும்( coach ) கடமை ஆற்றுகின்றேன்.
பயிற்றுவிப்பாளர் தகுதியையடைய ஏலவே பயிற்சி மற்றும் அங்கீகாரம் பெற்றிருந்தீர்களா?
ஆம்.நான் ஏலவே அகில இலங்கை வூசு போட்டிக்கான பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்று அதற்கான பரீட்சையில் சித்தி பெற்று பயிற்றுவிப்பாளர் அனுமதி( licence)பெற்று இருக்கின்றேன் .
தங்கள் எதிர்கால இலட்சியம் என்ன?
அந்த வகையிலே எனது எதிர்கால இலட்சியம் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு வூசு போட்டியிலே தங்கப்பதக்கம் பெற வேண்டும் என்பது.
நல்லது. இளம் சந்ததியினருக்கு இளைஞராகிய நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?
எதிர்கால சந்ததிக்கு நான் சொல்ல வேண்டியது விளையாட்டின் மூலம் நாங்கள் உயர்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன .ஆகவே விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் அதனை நீங்கள் கவனமாக எடுத்துக் கொண்டால் நீங்கள் நிச்சயமாக உயர முடியும். நிறைய வாய்ப்புகள் உள்ளன. வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்துங்கள்.