மட்டக்களப்பு பிராந்திய உணவகங்களில் இரவுநேர திடீர் அதிரடி சோதனை!

( வி.ரி. சகாதேவராஜா)  மட்டக்களப்பு சுகாதார பிரிவுக்கு உட்பட்ட ஜந்து பிரிவுகளில் இரவு நேர உணவுப் பாதுகாப்பு சுகாதாரம் தொடர்பாக திடீர் அதிரடிச்சோதனை நேற்று (22) வியாழக்கிழமை இரவு இடம் பெற்றது.
அதன் போது மக்கள் பாவனைக்கு உதவாத 3 உணவகங்களுக்கு  சீல் வைக்கப்பட்டது. 17 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவிருக்கிறது.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் இராசரெட்ணம் முரளீஸ்வரனின் ஏற்பாட்டில் இவ் இரவு நேர விசேட அதிரடிச் சோதனை இடம்பெற்றது.
இதில் பிரதி சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி சரவணபவான் உட்பட எட்டு வைத்தியர்கள்,2 உணவு மருந்து பரிசோதகர்கள்,2  மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள் 4 மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள் ,17 சுகாதார பரிசோதகர்களும் பங்கு பற்றினார்கள்.
கண்காணிப்புக் குழுவின் மூலம் 32 உணவகங்கள் பார்வைக்குட்படுத்தப்பட்டு அவற்றுள் 23 உணவகங்களில் பாவனைக்கு உதவாத உணவுகள் கைப்பற்றப்பட்டன.
அதேவேளை 17 உணவகங்களுக்கெதிராக வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்பு முறைகள் தொடர்பான விழிப்பூட்டல்களும் , ஆலோசனைகளும் வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து இவ்வாறான செயற்பாடுகள் மூலம் சுகாதாரமான,பாதுகாப்பான உணவுகளை மக்களுக்கு எதிர்காலத்திலும் கிடைக்க செய்வதே சுகாதார பணிமனையின் நோக்கமாகும் என்று பணிப்பாளர் டாக்டர் இரா. முரளீஸ்வரன் தெரிவித்தார்.