( வி.ரி.சகாதேவராஜா) எமது மனதிலுள்ள அகப்பேய்கள் அகற்றப்படவேண்டும். ஆம், கோபம் பொறாமை ஆசைகள் அகற்றுவோமானால் நிம்மதி உண்டாகும் .இறைவனை அடையலாம். இவ்வாறு தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத்
சுவாமி விமூர்தானந்தஜி மஹராஜ் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் சமய சொற்பொழிவு நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்தானந்தஜி மஹராஜ் நேற்று (22) வியாழக்கிழமை மாலை மேற்படி ஆலயத்திற்கு விஜயம் செய்தார். சுவாமிகளுடன் மற்றுமொரு இகிமி.சுவாமி மாத்ருசேவானந்த ஜீ மகராஜ்ஜும் வருகை தந்தார்.
ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மு.கு.சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் முன்னிலையில் ஆலய பரிபாலன சபை தலைவர் இ.மேகராஜா( அதிபர்) தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
கடந்த 10 நாட்களாக இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று வருகின்றேன். அழகான ஆலயங்கள். இலங்கையில் இத்தனை பேராபத்து பெரும் போர் இடம்பெற்று பாரிய இழப்பு இடம் பெற்றிருந்த பொழுதிலும் இன்றும் மக்கள் சமய நம்பிக்கையில் நிறைவாக இருக்கின்றார்கள்.
உண்மையில்
சமயம்தான் ஒரு சமூகத்தின் முதுகெலும்பு. இலங்கையில் இறைநம்பிக்கை அதிகமாக உள்ளது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தானாக இவ் ஆலய மூர்த்தி தோன்றியிருந்தாலும் நானூறு ஒரு வருடங்களுக்கு முன்பு தான் அது மக்களால் இனங்காணப்பட்டதாக இங்குள்ள பிரதமகுரு சொன்னார் .என்னே அதிசயம்! என்னே அற்புதம்!! இதுதான் இவ்வாலயத்தின் சிறப்பு.
என்றார்.
ஸ்ரீமத் சுவாமி
விமூர்தானந்தஜி தற்கால
இளைஞர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பக்தர்கள் மற்றும் அனைவருக்குமான
எழுச்சிமிகு சொற்பொழிவுகளை வழங்கி அவர்களின் சுயமுன்னேற்றத்துக்கான
சிந்தனைகளைத் தூண்டக்கூடிய வகையில் உரையாற்றினார்.
இ.கி.மிசன் பிரமுகர்களான எஸ்.செல்வநாயகம் முன்னாள் தவிசாளர் சிவ.அகிலேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக ஆலய பூஜையில் பங்கேற்ற சுவாமிகள் சில மணிநேரம் தங்கியிருந்து விடைபெற்றார்.