திருகோணமலை சீனாக்குடா விமானப்படை கல்விபீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எரோ பேஸ் “Aero Bash” 2024 நிகழ்வுகள் இன்று (22) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த விமானப்படையின் கண்காட்சி இலங்கை விமானப்படை தளபதி எயார்மார்ஷல் உதயனி ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் மங்கள விளக்கேற்றி திருகோணமலை விமானப்படை பயிற்சி பீடத்தின் பீடாதிபதி எயார் கமாண்டோ துஷார வீரரத்ன அவர்களின் கையளிப்பில் இலங்கை விமானப்படை தளபதி எயார்மார்ஷல் உதயனி ராஜபக்ஷ
அவர்களின் கரங்களினால் உத்தியோபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் போது இலங்கை விமானப்படையின் தளபதி எயார்மார்ஷல் உதயனி ராஜபக்ஷ ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
எரோ பேஸ் “Aero Bash” 2024 நிகழ்வானது கல்வி, தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக கண்காட்சியில் இலங்கை அரச பல்கலைக்கழகங்கள்,தனியார் பல்கலைக்கழகங்கள், பாடசாலை மாணவர்களின் பங்கேற்ப்பில் வியாபார மற்றும் தொழில்நுட்ப கூடாரங்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன்,
இலங்கை விமானப்படையின் விமான சாகசங்கள், இடம்பெறுவதுடன் விமான படையினரின் பரசூட் சாகசங்கள், உட்பட விமானப்படையின் மோப்ப நாய்களை பயன்படுத்தி நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் விமானப்படையின் பங்களிப்பு எவ்வாறு இருக்கும் என்பன குறித்த கண்காட்சியில் முன்னெடுக்கப்பட உள்ளது என தெரிவித்த இலங்கை விமானப்படையின் தளபதி எயார்மார்ஷல் உதயனி ராஜபக்ஷ
யுத்த காலங்கள் மற்றும் அல்லாது ஏனைய காலங்களில் விமானப்படையினரின் உதவி எவ்வாறு பொதுமக்களுக்கு கிடைக்கப் பெறுகின்றது என்பது தொடர்பில் விமானப்படையின் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பில் செயல்முறை கண்காட்சியும் இவற்றுள் அடங்குகின்றன மேலும் அவசர உதவி தற்காப்பு கலை விமானப்படையின் பேண்ட் அணிவகுப்பு இரவு நேர இசை நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகள் இதன் போது உள்ளடக்கப்பட்டுள்ளதாக விமான படையின் தளபதி,
முக்கியமாக பாடசாலை மாணவர்கள் இவ்வாறான விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் எனும் நோக்கிலும் உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக குறித்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த கண்காட்சியில் கிழக்கு மாகாணத்தில் முதல்முறையாக “டென்டம் ஜம்பிங்” எனும் சாகச நிகழ்வும் விமான படையினரினால் நிகழ்த்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது என இலங்கை விமானப்படையின் தளபதி எயார்மார்ஷல் உதயனி ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும் குறித்த கண்காட்சியானது இன்று 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை தினமும் மாலை 3 மணி முதல் ஆரம்பமாகி நள்ளிரவு 12 மணி வரை இடம்பெறும் எனவும் பொது மக்களுக்கு இவ்வாறான சந்தர்ப்பம் கிடைப்பது மிகவும் அரிது எனவும் குறித்த சந்தர்ப்பத்தை தவறவிடாது அனைவரும் கண்டுகளிக்குமாறு விமானப்படை சார்பில் அழைப்பு விடுப்பதாக எயார்மார்ஷல் உதயனி ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
இலங்கை விமானப்படையின் இவ்வாறான சாகசங்கள் நாட்டின் சுதந்திர தினத்தில் மாத்திரமே காண முடியும் எனவும் மிகவும் அபூர்வமான இந்த சந்தர்ப்பத்தினை நாட்டு மக்கள் தவறவிடாமல் வருகை தந்து கண்டு மகிழுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாறு குறித்த கண்காட்சியினை ஏற்பாடு செய்த இலங்கை விமானப்படையின் திருகோணமலை பயிற்சி பீடத்தின் பீடாதிபதிக்கு நன்றி செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்
மேலும் இன்றைய ஆரம்ப நிகழ்வில் திருகோணமலையிலிருந்து மட்டுமல்லாது மட்டக்களப்பு கல்முனை போன்ற பிரதேசங்களில் பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.