( வாஸ் கூஞ்ஞ) மன்னார் பொது வைத்தியசாலையில் மரணிக்கப்பட்ட இளம் தாயின் சம்பவம் தொடர்பாக நீதி கோரும்முகமாக அத்துமீறி வைத்தியசாலைக்குள் உட்புகுந்ததாக கூறப்பட்ட வைத்தியருக்கான வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.
28.07.2024 அன்று மன்னார் பொது வைத்தியசாலையில் இளம் தாய் ஒருவருக்கு சிகிச்சை அளிக்காத காரணத்தினால் மரணத்தை தழுவியதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இது தொடர்பாக தகவல் சேகரிக்கும் நோக்குடன் கடந்த வெள்ளிக்கிழமை (02;.08.2024) இரவு வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அவர்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சென்றிருந்தார்.
அங்கு இவர் நடந்து கொண்ட விதத்தால் கடமையில் இருந்தவர்களுக்கு அசௌரியங்கள் எற்பட்டிருந்ததாக மன்னார் வைத்தியசாலை நிர்வாகத்தால் மன்னார் பொலிசில் முறைபாடு செய்யப்பட்டிருந்தது.
இதனால் இவர் கடந்த 03 ந் திகதி (03.08.2024) பொலிசாரால் கைது செய்யப்பட்டு 07ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டு பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து இதன் வழக்கு புதன்கிழமை (21.08.2024) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுக்கப்பட்டது.
வைத்தியசாலைக்குள் வைத்தியர் அர்ச்சுனா மற்றும் யுரியூப் நபர்களால் கைதொலைபேசி மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்களின் இருவெட்டுக்களை பொலிசாரிடம் ஒப்படைக்க முடியுமான என அப்பொழுது நீதிபதி வினவியபோது தாங்கள் ஒப்படைக்கின்றோம் என இவ்வழக்கில் எதிர் தரப்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் அதற்கு ஒத்துக் கொண்டனர்.
இவ்வழக்கில் எதிர் தரப்பான வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்காக சட்டத்தரணிகள் அந்தனி மடுத்தீன் . கமல்ராஜ் , செ.டினேஸ் , சுதர்சனா . கௌசலியா ஆகியோருடன் இன்னும் ஓரிருவரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இவ்வழக்கு மீண்டும் எதிர்வரும் 25.09.2024 அன்று அழைக்கப்படும் என நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.