பாண்டிருப்பு தீ மிதிப்பு உற்சவகால சகல செயற்பாடுகளுக்குமான பெறுநராக பிரதேச செயலாளர் ராகுலநாயகி நியமனம்

(வி.ரி.சகாதேவராஜா)  வரலாற்றுப் பிரசித்தி பெற்ற  பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு உற்சவ காலத்தில் நிதி நிர்வாகம் உட்பட சகல செயற்பாடுகளுக்குமான பெறுநராக(receiver ) நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன்  கல்முனை மாவட்ட நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
 கல்முனை மாவட்ட நீதிபதி ஏஎல்எம். றியால் கடந்த 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முன் நகர்த்தல் மனு(motion) மீதான வழக்கில் இந்த நியமனத்தை கட்டளை ஆக்கி வெளியிட்டார்.
பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதையம்மன் ஆலயம் மற்றும் மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் தொடர்பான தலைவர் மற்றும் நிர்வாகம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் சென்று கொண்டிருக்கின்றது.
அதேவேளை, குறித்த ஆலயத்தின் புதிய தலைவர்  மற்றும் நிர்வாகத்தை பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி தெரிவு செய்யுமாறு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரால் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது .
குறித்த தீர்மானத்திற்கு எதிராக அதனை இடைநிறுத்துமாறு( injunction order) கோரி இராசலிங்கம் மதனகாந்த் உள்ளிட்ட 11 பேர் வழக்கு தாக்கல்  செய்திருந்தனர்.
அந்த வழக்கின் எதிராளிகளாக சுந்தரலிங்கம் சுரேஷ் , பிரதேச செயலாளர் ரி.
அதிசயராஜ் ,அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, சிவசிதம்பரம் ஈஸ்வரன்( பாபு) ஆகியோர்  குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அதன்படி இந்த வழக்கின் கட்டளை கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் தேதி வழங்கப்படவிருந்தது.
இதற்கிடையில் ,  குறித்த கட்டளை காலப்பகுதிக்குள் குறித்த ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு  வைபவம் இடம்பெறவிருப்பதால் இதனை நடாத்துவதற்கு உரிய நிர்வாகத்தை தெரிவு செய்து தர வேண்டும் என்று  கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ், சட்டமா அதிபர் ஊடாக நகர்த்தல் மனு( motion ) ஒன்றை கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த வாரம் சமர்ப்பித்திருந்தார்.
 அதற்கு அமைவாக கடந்த 20ஆம் தேதி நீதிமன்றத்தில் நகர்த்தல் மனு மீதான வழக்கு மாவட்ட நீதிபதி ஏஎல்எம். றியால் முன்னிலையில் இடம் பெற்றது .
அதன் போது எதிராளிகள் சார்பில்  பிரபல சட்டத்தரணிகளான  எஸ் எஸ்.அப்பாஸி மற்றும் ஏஆர்எம்.கலீல்
ஆகியோர் சமர்ப்பணம் செய்திருந்தனர்.
 வழக்காளி சார்பில் சட்டத்தரணி ஏ. நதீர் சமர்ப்பணம் செய்தார்.
இவற்றை செவிமடுத்த நீதிபதி றியால்
 பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு  வைபவத்திற்கான நிதி நிர்வாகம் உள்ளிட்ட சகல செயல்பாடுகளையும் கவனிக்க, நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரனை  பெறுநர் ஆக  நியமித்து  கட்டளை பிறப்பித்தார்.
அதன்படி எதிராய் வருகின்ற தீமிதிப்பு உற்சவத்திற்கான சகல செயல்பாடுகளையும் பிரதேச செயலாளர் இதை திருமதி ராகுல நாயகி மேற்கொள்வார்.
மேற்படி திரௌபதை அம்மன் ஆலய வரலாற்றில்  ஆலய உற்சவத்தை பிரதேச செயலாளர் ஒருவர் சகல செயற்பாடுகளையும் மேற்கொள்வது இதுவே முதல் தடவை என்று சொல்லப்படுகிறது.