நாட்டை இரண்டே வருடங்களில் மீட்ட ஜனாதிபதி ரணிலை பலப்படுத்தி தலை சிறந்த நாடாக முன்னேற்றவே எமது கட்சி ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தீர்மானித்தது என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைமையகத்தில்திங்கட்கிழமை (19) மாலை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது
நாடு பொருளாதார பின்னடைவை கடந்த காலங்களில் சந்தித்து வங்குரோத்து நிலைக்கு சென்று கொண்டிருந்த போது இப்போது நாட்டை ஆட்சி செய்ய கேட்கும் சஜித் பிரேமதாச , அனுரகுமார போன்றோர்கள் காணாமல் போய் இருந்தார்கள். ஆனால் தேசிய பட்டியல் எம்.பியாக பாராளுமன்றம் வந்த ரணில் விக்கிரமசிங்க தைரியமாக முன்வந்து நாட்டை பொறுப் பேற்றார். மேலும் இரண்டு ஆண்டுகளில் இலங்கையை பொருளாதார சீர்கேட்டில் இருந்து மீட்டும் காட்டினார். எனவே தான் நாட்டை இரண்டே வருடங்களில் மீட்ட ஜனாதிபதி ரணிலை பலப்படுத்தி தலை சிறந்த நாடாக முன்னேற்றவே எமது கட்சி ஜனாதிபதி ரணிலை ஆதரிக்க தீர்மானித்தது என குறிப்பிட்டார்.
பெட்ரோல் டீசல் மருந்துகள் பால்மா எரிவாயு போன்றவற்றுக்காக நாள் கணக்கில் வெயில் மழையிலும் பட்டினியோடு இருந்த இலங்கையர்களை வீட்டில் நிம்மதியாக தூங்க வைத்த பெருமை ஜனாதிபதி ரணிலை சாரும். வர்த்தகர்கள், பொருளாதார சிதைவினால் இன்னல் உற்ற வேளை டொலரை ஒரு நிலையான இடத்தில் ரணிலின் அனுபவ முதிர்ச்சி அரசியல் நிலைநிறுத்தியதை நாம் மறந்து விட முடியாது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீழ்ந்த நாடுகளில் விரைவாக எழுந்த நாடாக இலங்கை மிளிர காரணம் ரணிலின் அரசியல் முதிர்ச்சியும் சர்வதேச அரசியலின் அனுபவமும், திறமையும் ஆகும்.
மக்கள் செல்வாக்கு நிறைந்த 100க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களையும், இலங்கையின் அதிக அரசியல் கட்சிகளையும், அதிகூடிய இலங்கையர்களின் நன்மதிப்பையும் பெற்ற ஜனாதிபதி மக்களுக்கு கஷ்டம் என்றவுடன் எவ்வாறு முன்வந்து தீர்வை கண்டரோ அதே போன்று மக்களுக்கும் ரணிலை ஜனாதிபதியாக மீண்டும் ஆட்சி பீடம் ஏற்ற தயாராகி விட்டார்கள். உணர்ச்சிவசப்படுத்தும் பேச்சுக்களுக்கு மக்கள் அடிபணியாமல் நாட்டில் மீண்டும் அரகல ஒன்றை தவிர்க்கும் விதமாக பெரும்பான்மை வாக்குகளுடன் ஜனாதிபதி ரணிலை ஆதரிப்பார்கள்.
பெரும்பான்மை சிங்கள மக்களினது மட்டுமல்ல தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ, மலையக மக்களின் அதி கூடிய வாக்கும் ரணிலுக்கே உள்ளது என்பதை செப்டம்பர் 22 இந்த நாடு தெரிந்து கொள்ளும் என்றார்.
இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தவிசாளர் பொறியியலாளர் என்.ரீ.எம். சிராஜுதீன், செயலாளர் எம்.பி.எம். நிஹாப் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.