கல்முனை வலயம் வரலாற்றுச் சாதனை

மாவட்ட மட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகளில் கல்முனை கல்வி வலயம் வரலாற்று சாதனை புரிந்துள்ளது. வியாழக்கிழமை திருக்கோவிலில் நடைபெற்ற 38 அரங்கப் போட்டிகளில் 22 முதலாம் இடங்களைப் பெற்று மாகாணப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது

38 போட்டிகளில் 37 போட்டிகளுக்கு 22 முதலிடங்கள், 09 இரண்டாம் இடங்கள், 07 மூன்றாம் இடங்கள் அடங்களாக முதல் மூன்று இடங்கள் கிடைத்துள்ளன. கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் அவர்களின் தொடரான ஆலோசனை வழிகாட்டல் மற்றும் நேரடிப் பங்கு பற்றுதலால் கல்முனை வலயம் இச் சாதனையை நிலை நிறுத்தி இருக்கிறது.

கல்வி முகாமைத்துவத்திற்கு பொறுப்பான பிரதி கல்விப் பணிப்பாளரும் தமிழ் பாடத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளருமான யூ.எல்.றியால் அவர்களின் திட்டமிட்ட முன்னேற்பாடுகளுக்கான வெற்றிகளே இவை என்றும் கல்வி அபிவிருத்திக்கான பிரதி கல்விப் பணிப்பாளரும் தமிழ் மொழித் தின போட்டிகளின் நிறைவுறல் வரை மிகப் பாரிய பங்களிப்புகளை நல்கிய எம்.எச்.றியாஸா அவர்களின் அயராத ஒத்துழைப்புகள் வெற்றியின் பங்களிப்பில் குறிப்பிடத்தக்கவை. மேலதிக வழிகாட்டல்களையும் ஒத்துழைப்புகளையும் வழங்கிய பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம். ஜாபிர், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், உதவி கல்விப் பணிப்பாளர்கள், வளவாளர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகள் என கல்முனை வலய தமிழ் மொழித் தின குழு செயலாளர் ஜெஸ்மி எம்.மூஸா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மாணவர்களை வழி காட்டியதுடன் போட்டிகள் முடியும் வரை ஒத்துழைப்பு வழங்கிய அதிபர்கள், பயிற்றுவித்த ஆசிரியர்கள், பங்கெடுத்த மாணவர்கள் அனைவருக்கும் விஷேடமான நன்றிகள் என தெரிவித்த அவர் மாகாண மட்டத்திலும் இலக்குகளை எட்ட பிரார்த்தனைகள் செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.