நாட்டை ஞானத்தோடு ஆள உண்மையான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்

எமது நாட்டை ஞானத்தோடு ஆள்வதற்கு உண்மையான தலைவரை தேர்ந்தெடுக்க வெளிச்சம் மருதமடு தாய் வழியாக கிடைக்க வேண்டும் என்று எமது செபத்தில் வேண்டுவோம். எமது வாழ்வும் விண்ணகமே என்பதை நாம் அதிகமாக சிந்திக்க வேண்டும் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா வியாழக் கிழமை (15) காலை 6.15 மணிக்கு மடு பரிபாலகர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளாரின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.

இப்பெருவிழாவின் கூட்டுத்திருப்பலியானது மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு டொன் விமலசிறி ஜெயசூரிய ஆண்டகையும் உட்பட கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

இவ்விழாவில் மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தனது மறையுரையில்

கன்னி மரியாள் தனது மண்ணக வாழ்வை முடித்துக் கொண்டதுடன் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டாள் என்ற மரியன்னையின் விண்ணேப்பு விழாவை திருஅவையுடன் நாம் இங்கு கொண்டாடுகின்றோம்.

நாம் யாவரும் அன்னையின் பிள்ளைகள் என்ற எண்ணக் கருத்துடன் இங்கு இந்த மருதமடு ஆலயத்தில் ஒன்றித்து நிற்கின்றோம்.

2024 ஆம் ஆண்டு மருதமடு அன்னைக்கு இத்திருப்பதியில் முடிசூட்டப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவுறுவதால் நாம் அன்னையின் மூலம் பெற்ற நன்மைகளுக்காக மூவுறு கடவுளுக்கும் நன்றி சொல்லுவோம்.

இதை முன்னிட்டு மன்னார் மறைமாவட்டத்தில் ஆன்மீக வழியில் ஆய்த்தங்களை செய்து கடந்த யூலை மாதம் இப்பதியில் பல ஆயர்கள் , குருக்கள் , துறவிகள் , பொது நிலையினருடன் இணைந்து நாம் பயபக்தியுடன் இவ்விழாவை கொண்டாடினோம்.

2025 ஆம் ஆண்டானாது இயேசு மனிதனாக அவதரித்த இரண்டாயிரம் ஆண்டு நிறைவை சிறப்புடன் கொண்டாட இவ் ஆண்டை செப ஆண்டாக பரிசுத்த பாப்பரசர் அறிவித்துள்ளார்.

இதற்கமைய நாம் தனிப்பட்ட வாழ்விலும் , குடும்ப ரீதியாகவும் , அன்பியங்களிலும் செப வாழ்வுக்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

அதிகமானோர் தூர இடங்களிலிருந்தும் இன்னும் பலர் நேரத்துடன் வந்து மழை காற்று வெயில் போன்ற சூழ்நிலைக்குள் இருந்து இங்கு மடு அன்னையில் பாதத்தில் ஒரே குடும்பமாக இருப்பதையிட்டு நான் இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்.

மரியாள் தான் ஆண்டவரின் தாய் என்ற எண்ணமற்றவளாக இருக்காது எலிசபேத்தம்மாள் கருத்தரித்து இருந்த வேளையில் அவவுக்கு உதவி செய்ய வேண்டும் என்று சேவை செய்தது மட்டுமல்ல யாருக்கெல்லாம் தேவைகளை உணர்ந்தாலோ அவர்களுக்கெல்லாம் உதவி செய்தாள்.

இதனால்தான் இறைவன் அன்னைக்கு மேலான கொடைகளை வழங்கினார். இதனால்தான் இறைவன் அன்னையை உடலோடும் ஆன்மாவோடும் எடுத்துக் கொண்டார்.

ஆகவேதான் எமது வாழ்வும் விண்ணகமே என்பதை நாம் அதிகமாக சிந்திக்க வேண்டும். விண்ணகத்தில் அன்னைக்கு பக்கத்தில் நாமும் அமர்ந்திட இந்த மண்ணக வீட்டை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எமது நாட்டை ஞானத்தோடு ஆள்வதற்கு உண்மையான தலைவரை தேர்ந்தெடுக்க வெளிச்சம் மருதமடு தாய் வழியாக கிடைக்க வேண்டும் என்று எமது செபத்தில் வேண்டுவோம்.

கண்ணீரே உணவாகவும் , கவலையே வாழ்வாகவும் . தீராத வருத்தங்களும் . துன்பங்களும் வாழ்வாகவும் பொருளாதார கஷ்டங்கள் சுமைகளாகவும் , செய்வது அறியாது சொல்லொண்ணா துன்பத்தில் வாழும் நாம் மருதமடு அன்னையிடம் தஞ்சம் புகுவோம் என மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மருதமடு அன்னையின் விழாவின்போது தனது மறையுரையில் இவ்வாறு தெரிவித்தார்.