தாய்லாந்தில் தங்கம் வென்ற சுதாகரனுக்கு கிழக்கிலிருந்து வாழ்த்து.

( வி.ரி. சகாதேவராஜா)  தாய்லாந்தில் நடைபெற்ற பெரு விளையாட்டின் போது இலங்கையில் இருந்து சென்று தங்கம் வென்ற கம்பளையைச் சேர்ந்த கணேசன் சுதாகரனுக்கு கிழக்கில் இருந்து நேரடியாக சென்ற ஆசிரியர் குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
தாய்லாந்தில்  நடைபெற்ற ஆசிய ‘வூசு’ (WUSHU) போட்டியில் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்துக்குட்பட்ட கம்பளையைச் சேர்ந்த கணேசன் சுதாகரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கம்பளையைச் சேர்ந்த அதிபர்களான கணேசன் புவனேஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது புத்திரன் சுதாகரன் ஈட்டிய கடல் கடந்த தெற்காசிய சாதனை தொடர்பாக பாராட்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது .
இந்த சர்வதேச சாதனை காரணமாக இலங்கை வான்படையில் அவருக்கு தொழிலும் கிடைத்துள்ளது.
அந்த வகையில் சுதாகரனின் தந்தை தங்கையா கணேசன் மட்டக்களப்பு  ஆசிரியர் கலாசாலையில் 1991/92 காலப் பகுதியில் விஞ்ஞான பயிற்சி ஆசிரியராக இருந்தவர். தற்பொழுது புஸ்ஸல்லாவ சரஸ்வதி மகா வித்தியாலய அதிபராக இருக்கிறார். அவரது புதல்வரின் இந்த சர்வதேச சாதனையை பாராட்டு முகமாக மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் 91/ 92 அணியினர் புலன அணித் தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் கடந்த சனிக்கிழமை ( 10) கம்பளைக்கு சென்று அவரது இல்லத்தில் பாராட்டை நிகழ்த்தி வாழ்த்தினர்.
 அதன் போது அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.