மாவட்டம் பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கப்பல் துறை பகுதியில் உள்ள மக்கள் தங்கள் காணிகளை அபகரிக்க வேண்டாம் என கோரி இன்று (10) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த கவனயீர்ப்பில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் அல்அக்சா ஜூம் ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் இருந்து அஷ்ரப் நகர் வயல் வீதி வரை பேரணியாக சென்றனர். “வேண்டாம் வேண்டாம் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் வேண்டாம், எங்களுடைய விவசாய காணிகள் எங்களுக்கு வேண்டும், போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இலங்கை துறை முக அதிகார சபையினர் தங்கள் பகுதிக்குள் வந்து விவசாயம் செய்ய விடாது தடுத்து நிறுத்துவதுடன் எந்தவித கட்டிடமோ குடியிருப்புக்களை அகற்றுமாறும் வற்புறுத்துவதாக தெரிவிக்கின்றனர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர். குறித்த கப்பல் துறை கிராமத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அன்றாட ஜீவனோபாயமாக மீன் பிடி ,விவசாயத்தை கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சுமார் 150 ஏக்கர் அளவில் விவசாய காணிகள் காணப்படுகின்றன.
இவ்வாறு 1977ல் மீள் குடியேறிய மக்கள் தற்போது அவர்களை வெளியேறுமாறு துறை முக அதிகார சபையினர் கூறி வருகின்றனர். அப்போதைய கப்பல் துறை ,துறை முகங்கள் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சராக செயற்பட்ட மறைந்த எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் மக்கள் மீள் குடியேற்றப்பட்டார்கள் என்பதுடன் குறித்த அமைச்சரால் 1995 பங்குணி மாதம் 04ம் திகதி குறித்த கிராமத்தில் உப தபால் கந்தோர்,வாசிகசாலை, கிராம அதிகாரி ,சனசமூக நிலைய கட்டிடத் தொகுதியும் திறந்து வைக்கப்பட்டு தற்போது வரை இயங்கி வருவதுடன் மக்கள் சேவையும் இடம் பெற்று வருகிறது.
நாங்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வாழ்ந்து வருகிறோம் துறை முக அதிகார சபையினர் எங்களை வெளியேறுமாறு அடிக்கடி தொல்லை செய்கின்றனர் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள் எனவும் கவனயீர்ப்பில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே இப் பிரதேச மக்களின் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி வாழ வைக்குமாறும் இதன் போது கோரிக்கை விடுத்தனர்.