அக்கரைப்பற்றில் இருந்து மருத்துவ நிர்வாகத்துறை கற்கை நெறிக்கு தெரிவான வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் தெரிவு

அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மண்ணில் இருந்து மருத்துவ நிர்வாகத்துறை கற்கை நெறிக்கு ( (Msc in administration ) ) வைத்தியர் திருமதி குணாளினி சிவராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவ துறையின் நிருவாக துறைக்கான போட்டிப்பரீட்சையில் முதற்தடவையாக தோற்றிய அவர் கடந்த மே மாதம் வெளிவந்த முடிவுகளின் பிரகாரம் சித்தியடைந்ததுடன்; கடந்த வாரம் இடம்பெற்ற நேர்முகத்தேர்விலும் சித்தியடைந்து பிரதேசத்தின் முதலாவது பெண் வைத்திய அத்தியடசகர்; எனும் அங்கீகாரத்தினை பெற்றுக்கொண்டார்.

இதனடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட சித்தியடைந்த 25 வைத்தியர்கள் அடங்கிய பட்டியலில் அவர் பெயர் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதில் 15 சிங்களவர்களும் 08 தமிழர்களும் 02 முஸ்லிம்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கல்முனை பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ் பெண் வைத்திய அத்தியட்சகர் இவர் என்பதுடன் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு மண்ணில் தெரிவு செய்யப்பட்ட இரண்டாவது வைத்திய அத்தியட்சகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது ஆரம்பகல்வியை ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலத்தில் பயின்ற அவர் உயர்தரக்கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் கற்று உயர்தரத்தில் சிறப்பு சித்தியடைந்து மருத்துவ துறைக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அங்கு பட்டப்படிப்பினை நிறைவு செய்து அம்பாரை பொது வைத்தியசாலையில் உள்ளக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு பின்னர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்டார். அங்கிருந்து இடமாற்றம் பெற்று அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றிய நிலையில் பனங்காடு பிரதேச வைத்தியசாலையின் தேவை கருதி இடமாற்றப்பட்டார்.

தனது அர்ப்பணிப்பான சேவை மூலம் பனங்காடு பிரதேச வைத்தியசாலையினை கட்டியெழுப்பியதுடன் அபிவிருத்திக்குழுவுடன் இணைந்து சுமார் ஒரு கோடி நிதியை பொதுமக்களின் பங்களிப்பாக பெற்றுக்கொடுத்து வைத்தியசாலையின் அபிவிருத்தியில் பாரிய பங்கெடுத்தார்.

அத்தோடு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொருளாளராக இணைந்து சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட நிதியை செயலாளர் உபதலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து சேமித்து கணித விஞ்ஞான துறை மாணவர்களுக்கு இலவச வகுப்பினை ஆரம்பித்த பெருமையும் இவருக்குரியது.

இதேபோல் சமூக சமய பணிகளிலும் அயராது உழைக்கும் இவருக்கு பிரதேச மக்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.