எதிர்வரும் ஆவனி மருதமடு பெருவிழாவுக்காக பக்தர்கள் தற்பொழுது வந்த வண்ணம் காணப்படுகின்றனர். பத்து லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இவ் விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக நடைபெற்றக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுடன் ஆராயப்பட்டது.
எதிர்வரும் ஆவணி மாதம் 15ந் திகதி (15.08.2024) நடைபெற இருக்கும் மன்னார் மறைமாவட்டத்தின் யாத்திகர் ஸ்தலமாக விளங்கும் மருதமடு அன்னையின் பெருவிழா தொடர்பாக மடு ஆலயத்திலுள்ள யோசவ் வாஸ் கேட்போர் கூடத்தில் திருவிழாவை முன்னிட்டு முன்னெடுக்கபட்டு வரும் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
வெள்ளிக் கிழமை (09.08.2024) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கே.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் கூட்டத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மடு பரிபாலகர் அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் குரு முதல்வர் அருட்பணி பி.கிறிஸ்துநாயகம் அடிகளார் உட்பட மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவ் ஆவணி மாத பெருவிழாவுக்கு குறைந்தது சுமார் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும்
இவ் விழாவை முன்னிட்டு ஏற்கனவே மடுத் திருதத்தலத்திலுள்ள 550 வீடுகளும் பக்தர்களால் பெறப்பட்டுள்ளதுடன் தற்பொழுது பெருந்தொகையான பக்தர்கள் மடுத்திருப்பதிக்கு வருகை தந்து கொண்டு இருப்பதாகவும்; தெரிவிக்கப்பட்டது.
இப் பெருவிழாவுக்கு வருகை தருபவர்களுக்கான சுகாதாரம் . பாதுகாப்பு . போக்குவரத்து , மின்சாரம் , உணவு , குடிநீர் மற்றும் தங்குமிட வசதிகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் இவ் விழா தொடர்பாக ஆரம்பக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக சகல நடவடிக்கைகளும் திருப்திகரமாக இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.