(ஹஸ்பர் ஏ.எச்) மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, திருக்கோணமலை மாவட்ட த்தில் நிலவுகின்ற மிக முதன்மையான சிக்கல்களை இந்த உயரிய அவையின் கவனத்திற்கு கொண்டுவந்து அவற்றிக்குத் தீர்வு காண விழைகின்றேன் என திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தெரிவித்தார். நாடாளுமன்றில் (06)தனது முதலாவது கண்ணியுரையின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்.
1. திருக்கோணேச்சரம் வரலாற்று புகழ்மிக்க ஒரு புனிதத் தலம் இக்கோவிலுக்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர் இவர்கள் இந்த இடத்தின் அழகைக் கண்டு களிக்க விரும்புகின்றனர். சட்ட விரோதமாகக் கட்டப்பட்ட கடைகள் இதற்குத் தடையாக உள்ளன. மேலும் இக்கடைகளினால் கோவிலின் புனிதத் தன்மை கெடுவதோடு இங்கு சில சமூக விரோதச் செயல்பாடுகளும் இடம் பெறுகின்றன. எனவே இக்கடைகளை வேறு ஒரு தகுந்த இடத்திற்கு மாற்ற வேண்டும் என 2019 மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு எடுக்கப் பட்டது எனினும் இம்முடிவு இது வரையிலும் செயற்படுத்தப்பட வில்லை இந்த முடிவை விரைந்து செயற்படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
2. இரண்டாவதாக நமது நாட்டின் குடியரசுத் தலைவரும் அரசும் உணவு உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றனர். எனினும் அரசின் ஓர் அங்கமான வனத் துறை திருக்கோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ நாற்பதாயிரம் ஏக்கர் நிலைத்தையும் தொல்பொருள்துறை 2600 ஏக்கர் நிலைத்தையும் கையகப் படுத்தி வைத்துள்ளனர்.
இந்தக் காணிகள் 1985ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் பயிர் செய்த நிலங்கள் ஆகும். 1985ஆம் ஆண்டுக்கு முன்பு மக்கள் பயிர் செய்த நிலங்கள் விடுவிக்கப்படும் என்று குடியரசுத் தலைவர் கூறிய பொழுதும் அது நடைபெறவில்லை. இந்தக் காணிகளை விடுவிக்க அரசு விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
வனத்துறை கையகப்படுத்தி வைத்துள்ள பகுதிக்குள் 80 சிறு குளங்கள் உள்ளன. வனத்துறை இந்த நிலங்களை விடுவித்து இக்குளங்களை திருத்தி அமைப்பதன் மூலம் சில ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை நெற்செய்கையின் கீழ் கொண்டுவர முடியும். இவற்றின் மூலம் நாட்டின் நெல் உற்பத்தியை பெருக்குவதோடு உழவரது பொருண்மிய நிலையையும் மேம்படுத்தலாம்.
3. மூன்றாவதாக திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள கடற் தொழிலாளர் எதிர்கொள்ளும் சிக்கல்களை பற்றி தங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன். இந்த மாவட்டத்தில் ஏறத்தாழ 23,000 ஆயிரம் குடும்பங்கள் கடற் தொழிலை நம்பி வாழ்கின்றனர் எனினும் நவீன மீன்பிடி முறைமைகள் எதுவும் பின்பற்ற படுவதில்லை. பன்னாள் மீன்பிடிப் படகு வைத்திருக்கும் மீனவர்கள் மிகக் குறைவாகவே இருக்கின்றனர். பெரும்பாலும் ஓர் எந்திரம் பூட்டிய படகில் சென்று மீன் பிடிப்பவர்களே மிகப் பெரும்பான்மையாக உள்ளனர். இவர்களால் அதிக மீன்களையும் பிடிக்க இயலவில்லை கடலுக்குச் செல்லும் பொழுது அடிக்கடி காணாமலும் போகின்றனர். அப்படி துன்பப் பட்டு போராடிப் பிடித்த மீன்களுக்கு சரியான விலையும் கிடைப்பதில்லை பெரும்பாலும் இடைத் தரகர்களே இலாபம் ஈட்டுகின்றனர்.
இதற்கான தீர்வாக ஏழை மீனவர்களுக்கு பன்னாள் மீன்பிடிப் படகு கொள்வனவு செய்வதற்கு மானியத்துடன் கூடிய கடன் கொடுக்கும் திட்டங்கள் ஏற்படுத்தப் பட வேண்டும்.
மேலும் பன்னாள் மீன்பிடிப் படகுத் துறைகள் திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் துறை முகத்துவாரம், சம்பூர் மற்றும் சல்லி ஆகிய மீன்பிடி கிராமங்களில் நிறுவப்பட வேண்டும். இதனால் மீன் பிடியையும் மீனவர் பொருண்மியத்தையும் கூட்ட இயலும் என்பதோடு கடலில் காணாமற் போவோரின் எண்ணிக்கையும் குறையும். அதுமட்டுமின்றி படகுககள் காணாமற் போகுமிடத்து அப்படகுகளை வானூர்திகள் மூலம் தேடும் நடவடிக்கைகளை அரசு செய்ய வேண்டும்.
திருக்கோணமலை மாவட்டக் கடற்தொழிலாளர் எதிர்கொள்ளும் மற்றுமொரு சிக்கல் சுருக்குவலையில் மீன் பிடிப்பதாகும் . இதன் காரணமாக கடல் வளம் வரம்பை மீறிச் சுரன்டப் படுவதோடு 100 ஏழை மீனவர் பிடிக்கும் மீன்களை ஒரே ஒரு பெரும் முதலாளியின் சுருக்குவலை படகு பிடிக்கின்றது. சுருக்குவலை சிக்கலுக்குத் தீர்வு எட்டப்பட வேண்டுமாயின் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு அவற்றை முழுவதுமாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
4. நான்காவதாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் நிலவும் கல்வி தொடர்பான சிக்கல்களை தங்கள் மேலான பார்வைக்கு கொண்டு வருகின்றேன் இம் மாவட்டத்தில் 166 தொடக்க கல்வி ஆசிரியர் பற்றாக்குறையும் 116 கணித ஆசிரியர் பற்றாக்குறையும் 53 ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையும் 60 அறிவியல் ஆசிரியர் பற்றாக்குறையும் 52 கணினி ஆசிரியர் பற்றாக்குறையும் 53 தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையும் ஆக மொத்தம் 500 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது.இதனால் மாணவர்களது கல்வி மிகவும் பாதிக்கப் படுகிறது எனவே ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு போதிய ஆசிரியரை மாவட்டதிற்கு ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
இப்பொழுது உள்ள முறையில் ஆசிரியர் வளப் பங்கீடு சரியான முறையில் அமையவில்லை மாகாணங்களுக்கு ஆசிரியர் நியமிக்கும் பொழுது பெரும்பாலான ஆசிரியர் திருக்கோணமலை மாவட்டத்திற்கு வருகின்றார்கள். வந்த சில காலங்களில் தத்தம் மாவட்டங்களுக்கு இடமாற்றம் பெற்றுகொண்டு சென்று விடுகின்றனர்.
இந்தச் சிக்கலைத் தீர்பதற்குக் கல்வியல் கல்லூரிக்கு அனுமதி வழங்கும் பொழுது பிரதேச செயலாளர் மட்டத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு அவ்வவ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து தெரிவு செய்தால் இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம். உள்நாட்டு அமைச்சு கிராம அலுவலர்களை நியமிக்கும் பொழுது பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களுக்கு. அவ்வவ் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ளவர்களையே நியமிக்கின்றார்கள் இதே முறையை கல்வி அமைச்சும் பின் பற்றினால் ஆசிரியர் பற்றாக்குறைச் சிக்கலுக்கு தீர்வு காணலாம்.
மேலும் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. கல்வித் துறைக்கு 2023 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 1.3% நிதி மட்டுமே ஒதுக்கப் பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் 1.5% ஒதுக்கப்பட்டுள்ளது. இதைக் குறைந்தது 5% ஆவது உயர்த்தப்பட வேண்டும்.
மேற்கு நாடுகள் தமது வரவு செலவுத் திட்டத்தில் 5% க்கும் கூடுதலான தொகையை கல்விக்கு ஒதுக்குகின்றன என்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
5. அடுத்ததாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தின் மாவட்ட மருத்துவமனையில் 54 மருத்துவர் பற்றாக்குறையும் 9 துறைசார் மருத்துவ நிபுணர் 7 செவிலியர் பற்றாக்குறையும் 3 மருந்தாளர் பற்றாக்குறையும் 39 சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையும் 3 சாரதிகள் பற்றாக்குறையும்.
மேலும் மாகாண அரசின் கீழ் உள்ள மருத்துவமனைகளில் 40 துறைசார் மருத்துவ நிபுணர் பற்றாக்குறையும் 21 மருத்துவர் பற்றாக்குறையும் 27 செவிலியர் பற்றாக்குறையும் 22 மருந்தாளர் பற்றாக்குறையும் 6 மிகைஒலி ஊடுகதிர் தொழில்நுட்பவியலாளர் பற்றாக்குறையும் 100 சுகாதாரப் பணியாளர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு ஆவன செய்யுமாறு உரிய அமைச்சரைக் கேட்டுக் கொள்கின்றேன்.
திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையில் ஒரு பகுதி கட்டப்பட்ட நிலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு உள்ளன. இப்பிரிவில் அதிகளவில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதால், நோயாளிகளை நிர்வகிக்க போதிய இடவசதி இல்லாத நிலை உள்ளது. இக்கட்டடத்தை கட்டி முடிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் திருக்கோணமலை மாவட்டத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கான பிரிவு ஒன்று இல்லை இதனால் இம் மாவட்ட மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இவர்கள் வெளி மாவட்டங்களுக்கு சிகிச்சைக்காகச் செல்கின்றனர். இதன் விளைவாக இம்மக்கள் பணச் செலவு, போக்குவத்து, நேரம், மொழி, தங்குமிட வசதி முதலிய சிக்கல்கள்களை எதிர்நோக்குகின்றனர். இவற்றை தீர்ப்பதற்கு புற்றுநோய் பிரிவு ஒன்றை இம்மாவட்ட மருத்துவமனையில் நிறுவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
6. அடுத்ததாக திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற முடியாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் விளையாட்டு அரங்கு இல்லாமல் இருப்பதே ஆகும். இம்மாவட்டத்தில் உள்ள முதன்மையான மிகச் சிறந்த பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய Mc.Heizer விளையாட்டு அரங்கு நீண்ட காலமாக மறுசீரமைக்கப் படாமல் புதர் மண்டிபோய் உள்ளது. இதை மறுசீரமைப்பதன் மூலம் திருக்கோணமலையில் விளையாட்டு துறையில் சாதிக்க எண்ணும் பல நூற்றுக்கணக்கான இளையோர்கள் முன்னேறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்பதோடு பன்னாட்டு விளையாட்டு போட்டிகளை இங்கே நடத்தமுடியும் இதன் வழியாக நாட்டிற்கு அந்நிய நாணய மாற்று வருவாயை கொண்டு வர முடியும்.
7. அடுத்ததாகத் துறைமுக அதிகார சபையானது, பட்டணமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பதினொரு கிராம அலுவலர் பிரிவில் உள்ள 5572 ஏக்கர் நிலத்தை கையகப் படுத்தியுள்ளது. இதில் 1868 ஏக்கர் நிலத்தில் 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வாழ்கின்றார்கள்.துறைமுக அதிகார சபையின் கையகப் படுத்தல் காரணமாக மக்கள் தங்கள் நிலத்தில் எந்தவித செயற்பாடுகளையும் செய்ய இயலாமல் உள்ளது ஆகவே இவ்விடங்களை அங்கு வாழும் மக்ககளுக்கு கையளிக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
8. அடுத்ததாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் ஏறத்தாழ 10,000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன இவர்கள் போதிய படிப்பறிவு, பட்டறிவு மற்றும் வினைத்திறன் அற்றவர்களாக காணப்படுகின்றனர் ஆகவே இவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை கொடுத்து கமத்தொழில், கைத் தொழில், கால்நடை வளர்ப்பு, சேவைத் துறை முதலியவற்றில் சுயதொழில் செய்வதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.
9. திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள பல பிரதேச செயலாளர் பிரிவுகளின் எல்லைகள் தெளிவாக இல்லை இதனால் அதிகாரிகளும் பொது மக்களும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். இந்த எல்லைகளை தெளிவு படுத்த ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே, நான் இதுவரையில் திருக்கோணமலை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், நோயாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்களை இந்த உயரிய அவையில் கவனத்திற்கு கொண்டு வந்து உள்ளேன் இவற்றைத் தீர்ப்பதற்கு உரிய அமைச்சர்கள் ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.
என பாராளுமன்றத்தில் தனது முதலாவது உரையை நிகழ்த்தினார்.