( வி.ரி.சகாதேவராஜா) திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 34 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை!
இவ்வாறு திராய்க்கேணி படுகொலை தினத்தில் உரையாற்றிய
தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கி.ஜெயசிறில் குறிப்பிட்டார்.
1990 ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இடம்பெற்ற திராய்க்கேணி படுகொலை சம்பவத்தின் 34 வது வருட நினைவேந்தல் நிகழ்வு, சம்பவம் இடம்பெற்ற திராய்க்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இன்று (6) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துரையப்பா காத்தவராயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் காரைதீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், பிரபல சமூக செயற்பாட்டாளர் தா.பிரதீபன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டார்கள்.
ஆரம்பத்தில் ,படுகொலையின் போது வெட்டிக்கொலை செய்யப்பட்ட 54 பேர் நினைவாக ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது.
மலர் அஞ்சலி செலுத்தி அக வணக்கம் செலுத்தப்பட்டது.
ஆலயத்தில் விசேட பூசை இடம்பெற்றது.
படுகொலை சம்பவத்தில் கணவர்மாரை இழந்து விதவைகளான 40 பேரில், நேரிலே கண்முன்னே சம்பவத்தை பார்த்து இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் கருத்துக்களை அழுதழுது கூறினார்கள்.
அவர் மேலும் உரையாற்றுகையில்…
இலங்கை நாட்டிலே சுதந்திரத்திற்கு பின்பு திட்டமிட்டவகையில் 1956 ,1985 ,1990,2009 வரை தமிழ் மக்கள் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு வந்திருக்கின்றார்கள்.
ஆனால் இதுவரை அப் படுகொலைகளுக்கு நீதியோ, நஷ்ட ஈடோ கிடைக்கவில்லை.
எந்த இனமாக இருந்தாலும் ஆலயம் என்பது புனித ஸ்தலமாக இருக்கும். ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கையில் இந்து ஆலயத்தில் தான் அதிகமான படுகொலைகள் இடம் பெற்று இருக்கின்றன. அரசாங்கமே ராணுவத்தையும், முஸ்லிம் ஊர்காவல் படையினரையும் பயன்படுத்தி இந்த திட்டமிட்ட படுகொலையை செய்தது .
வீரமுனையிலும் ஆலயத்தில் வைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
இந்த வரலாற்றை எல்லாம் நாங்கள் அடுத்த சந்ததிக்கு எடுத்துசெல்ல வேண்டும். சமகால சந்ததியினர் சுதந்திரமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுகின்றன..
அம்பாறை மாவட்டத்திலேயே 58 தமிழ்கிராமங்களை இலக்கு வைத்து இன அழிப்பு நடத்தப்பட்டது. ஆலங்குளம், மீனோடைக்கட்டு போன்ற கிராமங்கள் ஒரு தமிழர்களும் இல்லாமல் முற்றாக கபளீகரம் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் இராணுவமும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் இனவாதிகள் இணைந்து செய்தார்கள் என்பது மாற்றுக் கருத்துக்களுக்கு இட இல்லை.
.எமது அடையாளத்தை நாங்கள் பேணவேண்டுமாக இருந்தால் அரசியல் ரீதியான தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் நாங்கள் தொடர்ச்சியாக அமைதி வழி அறவழிப்போராட்டத்தில் ஈடுபட வேண்டும். அதைத்தான் எமது கட்சியும் செய்து கொண்டிருக்கிறது.
நில ஆக்கிரமிப்பின் மறுவடிவமே திராய்க்கேணி படுகொலையாகும்.
அம்பாறை மாவட்ட தமிழர்களின் அடையாளத்தை இல்லா தொழிக்கவேண்டும் என்பதற்காக 1983 களிலிருந்து தொடர்ச்சியாக திட்டமிட்டு பல படுகொலைகளை செய்துள்ளார்கள். உண்மையில் அது நில ஆக்கிரமிப்பின் மறுவடிவமே. அந்த வகையில் குரூரமாக ஈவிரக்கமின்றி மேற்கொள்ளப்பட்ட திராய்க்கேணி படுகொலைக்கு இன்று 34 வருடங்களாகின்றன.
1990களில் ராணுவம் சில முஸ்லிம் இளைஞர்களின் உதவியோடு இங்கு செய்த இந்த குரூர கொலையானது, பரம்பரை பரம்பரையாக தமிழ்மக்களின் மனங்களிலே நினைவு கூறப்படும் .
இந்த பாமர மக்களை கொலை செய்தவர்களையும், எமது இனத்தின் மீது பாரிய அநியாயங்களை செய்தவர்களையும் நாங்கள் மறக்கவும் மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்.
நாம் எந்த ஒரு இனத்திற்கோ சாதிக்கோ அநியாயம் செய்ய மாட்டோம். நாங்கள் அவர்களுக்கு எதிரானவர்களும் அல்ல .ஆனால் எமது நிலங்களை சூறையாட வருபவர்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக போராடுவோம்.
முஸ்லிம் மக்கள் அனைவரும் இதில் சம்மந்தப்பட்டார்கள் என்று கூறவில்லை. ஆனால் ஒரு சில முஸ்லிம் இனவாதிகள் முன்னணியில் இருந்து செய்யப்பட்டதை நேரடியாக கண்ணால் கண்ட திராய்க்கேணி மக்கள் இங்கு பேசுகையில் கூறுகின்றனர்.
6 நாள் குழந்தையை கூட ஆலமரத்தில் அடித்து ஈவிரக்கமின்றி கொன்றிருக்கின்றார்கள் .
இதுபோல் வீரமுனை ,உடும்பன் குளம் ,நாவிதன்வெளி நீலாவண, காரைதீவு ,பாண்டிருப்பு போன்ற பல இடங்கள் இவர்களின் கைவரிசைக்கு இலக்காகி இருக்கின்றது.
அவர்களால் செய்த அழிப்பு ஒரு நாள். ஆனால் அது காலகாலமாக மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள்.
தமிழ் மக்களின் அடையாளமே அழிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் இலக்கு.
இன்னும் இந்த கொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை .ஒரு ஆறுதலுக்காவது ஒரு வழக்குத்தானும் போடப்படவில்லை. இந்த நிலையில் இங்கு இந்த மக்கள் ஐம்பது வீதமாக குறைந்து வாழ்க்கையை கடத்திக் கொண்டிருக்கின்றார்கள் .
இன்னும் நீங்கள் குறைய கூடாது என்பதற்காகவே இத்தகைய நிகழ்ச்சிகளை நடாத்துகின்றோம். இந்த வரலாறு இளம் சந்ததியினருக்கு எத்தி வைக்கப்பட வேண்டும் என்பதையும், இனத்தின் மீது கை வைப்போரை மறக்கவும் மாட்டோம் ,மன்னிக்கவும் மாட்டோம் என்பதையும் தெளிவுபடுத்துவது இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்றார்.