வீசா மோசடியில் 1.2 பில்லியன் டொலர்களை திருடியவர்களுக்கு எதிராக நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றோம்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
பாரிய நிதி மோசடிக்கு வழிவகுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான திருடர் தரப்பு வி.எப்.எஸ் நிறுவனத்திற்கு விலைமனு கோரல் விடுக்காமல், ஈ – வீசா சேவை தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையை மாற்றி, வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து சேவையைப் பெற அமைச்சரவை குழு மேற்கொண்ட தீர்மானத்தால் 1.2 பில்லியன் டொலர்களை இன்று இழந்துள்ளோம். இதனை நான் தான் பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்தேன். ரவூப் ஹக்கீம், சுமந்திரன், சம்பிக்க ரணவக்க, ரஞ்சித் மத்தும பண்டார, அசோக் அபேசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் குழு ஆகியோர் ஒன்றிணைந்து இந்த மோசடி குறித்து அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்தனர். இந்த ஊழல் மிக்க நடைமுறைக்கு தடை விதித்து, அதனை வலுவற்றதாக்கி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அதற்கமைய புதிய முறைமையை ஆரம்பிப்பதற்கு முன்னதாக காணப்பட்ட நடைமுறையின் கீழ் வீசா சேவையை முன்னெடுக்குமாறு நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி கட்சி எதிரணியில் இருந்து கொண்டு திருடர்களை பிடித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். இந்த மோசடி குறித்து வாய்ச் சொல் தலைவர்கள் பேசாவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு எதிராக குரல் எழுப்பி இன்றளவில் தடையுத்தரவையும் பெற்றுள்ளது.
கோப்புகளை காட்டிக் காட்டி பேசும் வாய்ச் சொல் தலைவர்கள் இந்த மோசடி குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த பொய்யர்களுக்கு ஏமாற வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியிடம் போலியான வேலைகள் இல்லை. வேலைகளை செயலில் காட்டியுள்ளோம். VFS ஒப்பந்தங்களினால் நாட்டுக்கு இழந்த பணத்தில் பாடசாலைகளை அபிவிருத்தி செய்திருக்க முடியுமல்லாவா எனவும் எதிர்கட்சி தலைவர் கேள்வி எழுப்பினார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் திவிதென ரணவிரு இராணுவ வீரர்களின் அமைப்பின் 10 ஆவது மாவட்ட மாநாடு இன்று(3) கம்பஹா நகரில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஆட்சியாளர்கள் அடிப்படை உரிமைகள் தொடர்பான தீர்ப்புகளைக் கூட விமர்சிக்கின்றனர். நாட்டின் அடிப்படை உரிமைகளைக் கூட செல்லாத முடிவுகளாகக் கருதும் ஆட்சியொன்றே தற்போது காணப்படுகிறது. பாராளுமன்ற சிறப்புரிமைகள் என்ற போர்வையில் இந்த அறிக்கைகளை வெளியிடுகின்ற போதிலும், உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை விமர்சிக்கும் அனைவரும் இந்த முடிவுக்கு உடந்தையாக இருந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அரசியல் பழிவாங்கல் நடக்காது. சட்டமே உயர்ந்தது. சட்டம் சரியாக அமுல்படுத்தப்படும். அரசியல் பழிவாங்கல் எம்மிடம் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாதுகாப்புப் படைகள் அரசியல்வாதிகளின் பிடியில் இருக்கின்றனர். இது குண்டர் அரசியலின் ஒரு அங்கமாக இருப்பதால், இந்த கலாச்சாரத்தை மாற்றியமைப்போம். போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் மாபியா, கொலை, ஊழல் போன்றவற்றை கண்டறிய புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த நடவடிக்கை எடுப்போம். எமது நாட்டில் காணப்பட்டுவரும் காலதாமதமான முறைமையினால் நீதியும் நியாயமும் நிறைவேற்றப்படாமை தொடர்பிலான பிரச்சினையையும் தீர்த்து வைப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது உலகின் யுத்தங்களுக்கு பயன்படுத்தும் தொழில்நுட்பம் கூட மேம்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்கும் தொழில்நுட்பம் கூட மேம்பட்டுள்ளது. எனவே நாமும் இந்த புதிய தொழிநுட்பங்களை கையாளும் விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு கூடிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். அதன் மூலம் அவர்களால் சுதந்திரமாக பணியாற்ற முடியுமான நிலை ஏற்படும் என எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.