உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறையில் ஜனாதிபதி தலைமையில் 1654 பயனாளிகளுக்கு காணி உறுதி வழங்கும் நிகழ்வு.

(பாறுக் ஷிஹான்)   மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் நோக்குடன் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்படும்   20 இலட்சம் காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் ”உறுமய” தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 20,000 பேரில், 1654 பயனாளிகளுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்  (25)   அம்பாறை வீரசிங்க விளையாட்டங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு  மாகாண  ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட  பாராளுமன்ற உறுப்பினர்களும்   மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

உறுமய திட்டத்தினால் மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தி, சொத்துப் பெறுமதியையும் உயர்த்த முடிந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கொவிட் தொற்று – பொருளாதார நெருக்கடியினால் சரிவடைந்த சொத்துக்களின் பெறுமதி “உறுமய” திட்டத்தின் ஊடாக வலுவடைந்திருப்பதால், அதனூடாக நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

“உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்,அம்பாறை மாவட்ட மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு   இன்று நடைபெற்ற போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்க அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டம் புரட்சிகரமானதாகும் எனவும் இதுவரையில் உலகின் எந்தவொரு நாட்டிலும் இவ்வாறானதொரு திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.  20 இலட்சம் பேர் இப்படியாக காணி உறுதி உரிமை இல்லாமல் இருக்கிறார்கள். அதனை மாற்றியமைக்க வேண்டுமென நான் தீர்மானித்தேன். கொவிட் – பொருளாதார நெருக்கடி காலங்களில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஒட்டுமொத்தமாக சொத்துக்களையும் இழந்தனர். சொத்துப் பெறுமதி வீழ்ச்சி கண்டது. நாம் இப்போது வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு வரும்போது அதன் நன்மைகளை சாதாரண மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க எம்மால் முடிந்த முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம்.

சாதாரண மக்கள், பொருளாதார நெருக்கடியால், காணிகள், சொத்துகள், செல்வங்களை இழந்தனர். அதனால் காணி அனுமதி பத்திரம் கொண்டவர்களுக்கு காணி உறுதிகளை வழங்க தீர்மானித்தேன். இந்த வேலைத்திட்டத்திற்கு முன்பாக கொவிட் – பொருளாதார நெருக்கடி காரணமாக இழக்கப்பட்டட சொத்துப் பெறுமதி உறுமய திட்டத்தினால் மீண்டும் வலுவடையும்.அனைவராலும் வேண்டாம் என வெறுத்து ஒதுக்கப்பட்ட அரசாங்கத்தை, பொறுப்பேற்று குறுகிய காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த தன்னால் முடிந்ததென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அடுத்த இரண்டு, மூன்று வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி இளைஞர்களுக்கு வலுவான எதிர்காலத்தை நிர்மாணிக்க ஒன்றுபடுமாறும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

இந்த அரங்கில் இருக்கும் அனைவரும் அனுமதி பத்திரங்களுடன் மாத்திரமே வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் இங்கிருந்து வௌியேறும் போது காணி உரிமையாளர்களாக செல்வீர்கள். உங்கள் காணிக்கு நிரந்தர உரித்து கிடைக்கும். நமது சமூகத்தில் காணி உரிமை கௌரவமாக பார்க்கப்படுகிறது. காணியின் பெறுமதி எமக்கான அந்தஸ்தாகவும் மாறும்.

இந்நாட்டில் பெருமளவானர்களுக்கு அவர்கள் பரம்பரையாக வசித்த காணிக்கு சட்டபூர்வமான அனுமதி கிடைக்கவில்லை. உறுமய திட்டத்தின் கீழ் அந்த காணிகளுக்கான உறுதிகள் வழங்கப்படும். அதன் பின்னர் நீங்கள் எவருக்கும் அடிபணிய வேண்டியதில்லை. உங்களுக்கு கிடைக்கும் நிரந்தர காணி உரிமையை இரத்துச் செய்யவும் அதிகாரம் இல்லை.

நாம் அனைவரும் கடந்த மூன்று வருடங்களில் பெரும் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தோம். நாட்டின் பொருளாதாரத்தை போலவே நமது பொருளாதாரமும் சரிவடைந்தது. கைகளில் பணம் இருக்கவில்லை.அனைவரும் கஷ்டங்களுடன் வாழ்ந்தனர். தற்போது பொருளாதார நெருக்கடிகளுக்கு நாம் படிப்படியாக தீர்வு கண்டு வருகிறோம். இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு இந்த வேலைத்திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.என்று ஜனாதிபதி தெரிவித்தார்.