பல்சமய மக்களாக வாழ்ந்தாலும் மற்றவர்களின் மதச் சுதந்திரத்தை மதிக்க வேண்டும்.

( வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் பல்லின மற்றும் பல்சமய மக்கள் வாழுகின்றபோதும் எம் மத்தியில் ஒற்றுமை தொடர்ந்து நிலைநாட்டப்பட வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய அபிவிருத்தி நிதியமும் வேம் என அழைக்கப்படும் கிராமிய முகாமைத்துவ நிறுவனங்களின் சம்மேளனமும் இணைந்து சனிக்கிழமை (15) மன்னாரில் மனித வாழ்வில் சமய சுதந்திரம் என்ற தொணிப் பொருளில் நிகழ்வு ஒன்றை நடாத்தினர்.

இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இங்க தொடர்ந்து உரையாற்றுகையில்

மனித வாழ்வில் சமய சுதந்திரம் என்ற தொணிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்த நிகழ்வு மிகவும் வரவேற்கப்பட வேண்டிய தொன்றாகும்.

மன்னார் மாவட்டத்தில் பல சமயங்களை பின்பற்றுபவர்கள் வாழ்கின்றார்கள். ஆகவே இவர்கள் மத்தியில் ஒற்றுமையை வளர்த்துக் கொள்வது மிக அவசியமானது.

1998 ஆம் ஆண்டு எமது நாட்டில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக்கு அமைய சகல மதங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்புகின்ற சமயத்தை பின்பற்ற முடியும். இது ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட உரிமை.

ஆகவே மன்னார் மாவட்டம் பல்லின பல்சமய மக்கள் வாழும் ஒரு மாவட்டமாக இருப்பதால் யாவரும் தங்கள் மதச் சுதந்திரத்தை பேண நாம் இடம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொருவரும் கடைப்பிடித்து வரும் மத நம்பிக்கைகளை நாம் மதிக்க வேண்டும். இது அமையாவிடில் நாட்டில் அமைதியின்மையும் பொருளாதாரமும் பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.

ஆகவேதான் நாம் சமய சுதந்திரத்தை பேணி பாதுகாக்கப்பட வேண்டும். இங்குள்ள ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதங்களைப் பற்றியே தெரிவிக்கின்றனர்.

ஆனால் இவர்கள் மற்றைய மதங்களைப் பற்றி விமரிசிப்பது கிடையாது. கடந்த காலத்திலும் சமயத் தலைவர்களும் இவ்வாறே செயல்பட்டு வந்துள்ளனர்.

இந்து மதத்தில் இராமகிருஷணன் என்ற சமய தலைவர் ஒருவர் இருந்தார். அவர் மதச் சுதந்திரத்தைப்பற்றி கூறுகையில்

ஒரு குளத்த்pல் நீர் எடுக்கும் ஆங்கிலேயர் வோட்டர் என்றும் , சிங்கள மொழி பேசும் ஒருவர் வத்துறு என்றும் , தமிழர் ஒருவர் தண்ணீர் என்றும் கூறியே ஒரே பொருளைத்தான் மூவரும் எடுக்கின்றனர்.

இவ்வாறுதான் யாவரும் வேறுபட்ட முறையில் இறைவனை நாடினாலும் எல்லோரும் ஒரே கடவுளைத்தான் நாடுகின்றனர் என வலியுறுதத்p இருந்தார்.

ஆகவே மன்னார் மாவட்ட மக்களும் பல சமயத்தவர்களாக இங்கு இருந்தாலும் தொடர்ந்து தங்கள் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்