உகந்தமலை முருகன் ஆலயத்திற்கு புதிய பரிபாலன சபை தெரிவது எப்போது?

( வி.ரி.சகாதேவராஜா)  வரலாற்று பிரசித்தி பெற்ற  உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான நிரந்தர பரிபாலனசபை  தெரிவது எப்போது?
இவ்வாறு மட்டு.அம்பாறை மாவட்ட இந்துக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
குறித்த நிரந்தர பரிபாலன சபை கூட்டப்படாது ஒரு வருடகாலமாக இழுத்தடிக்கப்பட்டு வருவதையிட்டு முருகன் அடியார்கள் கவலையோடு விசனம் தெரிவித்து வருகின்றார்கள்.
ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா மகோற்சவம் எதிர்வரும் யூலை மாதம் 5 ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.
இந் நிலையில் அங்கு ஒரு நிரந்தரமான பரிபாலன சபை அல்லது திருப்பணிச்சபை இன்னும் நிறுவப்படாமை குறித்து பலத்த விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இவ் ஆலயத்தின் நிதி நிருவாக செயற்பாடுகள் யாவும் தற்போது லாகுகலை பிரதேச செயலாளரிடம் உள்ளது.
இதற்காக கடந்த வருடம் யூன் மாதம் 9 ஆம் தேதி  புதிய பரிபாலன சபை தெரியும் கூட்டம்  லாகுகலை பிரதேச செயலகத்தில் சுமார்  நான்கு மணி நேரமாக நடைபெற்றது.
லாகுகலை பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா தலைமையில் நடைபெற்ற இவ் விசேட கூட்டத்தில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
உகந்த மலை முருகன் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் பாணமை விகாராதிபதி மற்றும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இந்து கலாச்சார உத்தியோகத்தர்கள் ஆகியோரும் மற்றும்
களுவாஞ்சிக்குடி முதல் பாணமை வரையுள்ள இந்து பக்தர்கள் கலந்து கொள்ளமுடியும் என்று அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததால் அவர்களும்
கலந்து கொண்டிருந்தனர்.
முதலில் ஆலய பரிபாலன சபை மற்றும் உறுப்பினர்களின் பணிகள் கடமைகள் பற்றி பிரதேச செயலாளரால் விளக்கமளிக்கப்பட்டு நிருவாகத் தெரிவு பிரதேசம் பிரதேசமாக நடைபெற்றது. அதில் ஒரு பிரதேசம் சார்பில் பிரதிநிதிகள் தெரியும்போது சிறு சலசலப்பு ஏற்பட்டது. அதனை காரணமாக வைத்து நிருவாகத்தை லாகுகலை பிரதேச செயலகமே தற்காலிகமாக மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டு கூட்டம் கலைக்கப்பட்டது. மொத்தத்தில் நான்கு மணி நேரமாக நடைபெற்ற அக் கூட்டம் பலனின்றி வீணாக கலைந்தது. பலரும் பலத்த விசனத்துடன் வெளியேறினார்கள்.
தற்போது அக்கூட்டம் நடந்து கிட்டத்தட்ட ஒருவருட காலமாகிறது. இன்னும் புதிய சபை தெரிவுசெய்யப்படவில்லை. தேசத்து ஆலயமாக விளங்கும் இவ்வாலயத்தை மக்களிடம் ஒப்படைக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஆலய வழக்கு தொடர்பாக வாதிடும் கல்முனை பிராந்தியத்தின் பிரபல சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித்திடம் கேட்ட பொழுது அவர் கூறியதாவது …
உகந்த மலை முருகன் ஆலயத்தின் மீது இரு வழக்குகள் பொத்துவில் நீதிவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டு இருக்கின்றது .ஊழல் குற்றச்சாட்டு குறித்த ஒரு வழக்கு அடுத்து திருப்பணிச்சபையை கலைத்து இடைக்கால சபையை நிறுவுவது குறித்து அடுத்து வழக்கு.
 இது இரண்டும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற வேளையிலே பிரதேச செயலாளர் நீதிமன்றத்தின் எந்த உத்தரவும் இல்லாமல் இப்படியாக  நிருவாகத்தை தன்னகத்தே வைத்து சர்வாதிகாரமாக ஆலயத்தை நடாத்தி வருவது சட்டவிரோதமானது. இதற்கு எவ்வித உரிமையுமில்லை.அதிகாரமுமில்லை.எந்த நீதிமன்ற  உத்தரவும் இதற்கு இல்லை. சட்டவிரோதமான செயல்பாட்டிலே தொடர்ச்சியாக ஒரு வருட காலம் இதனை நடத்தி வருவது பொது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்பது எனக்கும் தெரிய வந்திருக்கின்றது. இது ஒரு அல்ட்ரா வைரஸ் நிலைப்பாடு . பொதுமக்களின் விருப்பப்படி இந்த ஆலயத்திற்கு பாரம்பரிய வண்ணக்கரோடு புதிய நிருவாக சபையை தெரிவு செய்து வேறு யாரிடமும் செல்லாமல் மக்களிடம் ஒப்படைத்து   நடத்த வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின்பொறுப்பாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் அரசியல் பிரமுகர்களான பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உள்ளிட்ட பலரும் “இவ் ஆலயத்தை தொடர்ந்து லாகுகலை பிரதேச செயலகம் வைத்துக்கொண்டிருக்கக்கூடாது.நிலைமை நாளை மாறலாம். எனவே விரைவாக புதிய பரிபாலன சபையிடம் ஆலயத்தை ஒப்படைக்கப்பட வேண்டும் “என்று தெரிவித்துள்ளனர்.