துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகாகும்பாபிஷேகமும் வருடாந்த உற்சவமும்.

(சா.நடனசபேசன்) கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மட்டக்களப்பு துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேக நிகழ்வு எதிர்வரும் 05.06.2024 புதன்கிழமை இடம்பெறவுள்ளது

கிழக்கிலங்கையில் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு மாநகரின் தென்பால் சுமார் 32 கிலோமீற்றர் தொலைவில் மட்டக்களப்பு கல்முனை நெடுஞ்சாலையில் பெரியநீலாவணைக்கு மேற்குப் புற எல்லையில் மட்டக்களப்பு வாவிக்கரையினை அண்டியதாக அமைந்திருக்கும் பூர்வீகக் கிராமமாக விளங்கும் துறைநீலாவணைக் கிராமத்தின் கிழக்குப்புறமாக வயல் நிலம் சூழ நான்குபுறமும் நீர்சூழ்ந்த குளத்தின் அருகே அருள்டபாலித்து இருக்கும் முத்துமாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் எதிர்வரும் 05.06.2024 புதன்கிழமை இடம்பெறவுள்ளது ; ;இக்கும்பாபிஷேக நிகழ்வின் கர்மாரம்பம் 03.06.2024 திங்கட்கிழமை ஆரம்பமாக இருப்பதுடன் பால்காப்பு நிகழ்வானது 04.06.2024 செவ்வாய்க்கிழமை இடம்பெற இருக்கின்றது. அதனைத்தொடர்நது 10 நாட்கள் மண்டலாபிஷேகப் பூசையினைத் தொடர்ந்து அம்மனுடைய திருக்கதவு 15.06.2024 சனிக்கிழமை திறக்கப்பட்டு உற்சவம் 7 தினங்கள் இடம்பெற உள்ளது

இம் முத்துமாரியம்மன் ஆலயமானது மிகவும் பழமைவாய்ந்ததாக இருப்பதுடன் இவ்ஆலயத்திற்கு அருகில் சுமார் 3 நூற்றாண்டு பழமைவாய்ந்த அம்பாரைப்பிள்ளையார் ஆலயம் இருக்கிது இந்த ஆலயத்தில் இருக்கும் பிள்ளையார் ஆரம்பகாலத்தில் துறைநீலாவணைக் கிராமத்தினைச் சேர்ந்தவர்களால்; மட்டக்களப்பு வாவியில் இருந்து கண்டெடுத்ததாகவும் அப்போது அதனை கொண்டு குளத்தருகில் சிறிய கொத்துப்பந்தலில் வைத்து வழிபட்டு வந்ததாக தெரியவருகிறது அதன் அருகில் அக்கிராமத்தினைச் சேர்ந்தவர்கள் புகையிலைத்தோட்டம் செய்து வந்தபோது அப்பகுதியில் அம்மனுடைய அடையாளம் கண்டெடுத்ததாகவும் அதனால் அவ்விடத்தில் புகையிலைத்தோட்டம் செய்வதை நிறுத்திவிட்டு அம்மனுக்கு ஆலயம் அமைத்து நவராத்திரிகாலத்தில் சடங்குசெய்து வந்ததாகவும் பின்னர் அத்தினம் மாற்றப்பட்டு ஆனிப் பூரணையில் தொடர்ச்சியாக உற்சவம் நடைபெற்று வருகிறது

இந்த ஆலயத்தில் எவ்வித மரபுவழியும் பேணப்படுவதில்லை கிராமத்தில் இருக்கின்ற அனைத்து குடிமக்களுக்கும் இவ்ஆலயத்தில் முக்கியத்துவம் வழங்கப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

இவ் ஆலய உற்சவத்தில் ஊர்வலம் கன்னிக்கால்வெட்டல் மடிப்பிச்சை எடுத்தல் தீமிதித்தல் காத்தானை கழுவில்வைத்தல் விநாசகப்பானை தவநிலை சமுத்திரநீராடல் தீமூட்டல் வட்டுக்குத்துதல் போன்ற விசேடநிகழ்வுகள் இடம்பெறுகிறன .

அம்மனுடைய உருவச் சிலையினை சுமந்து செல்பவரை அம்பாள் என்ற பெயரால் அழைப்பார்கள் ஆரம்பகாலத்தில் அமரர்களான மு.பிள்ளையான்தம்பி மற்றும் ஆறுமுகம் போன்ற அடியார்கள் அம்மனுடைய உருவச்சிலையினை சுமந்து சென்றனர் தற்போது அருச்சுணன் என்பவரே அம்மனது உருவச்சிலையினைச் சுமந்துசெல்லுகின்றார்.

ஆலய உற்சவம் 15 ஆம் திகதி சனிக்கிழமை மாலை திருக்கதவு திறக்கப்பட்டு விசேடபூசைகள் ஆரம்பமாகும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை அம்மன் ஊர்வலம் இடம்பெறும் அதாவது அம்மன் அடியாரான அருச்சுணனால் அம்மனுடைய உருவச்சிலையை தாங்கிக்கொண்டு சப்புறத்தில் சோடனை செய்தும் அம்மன் ஊர்வலம் ஸ்ரீ உச்சிமா காளிகோவில் ஸ்ரீதில்லையம்பலப்பிள்ளையார் ஆலயம் ஸ்ரீசக்திவிநாயகர்ஆலயம் கண்ணகியம்மன்ஆலயம் ஸ்ரீ முருகன் ஆலயங்களுக்குச் சென்றுவரும் மறுநாள் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை துறைநீலாவணையில் இருந்து குடிபெயர்ந்து வாழும் உறவுகளான துரைவந்தியமேட்டுக்கிராமத்திற்கு அம்மன் ஊர்வலம் எடுத்துச்செல்லப்படும் 19 ஆம் திகதி புதன்கிழமை அம்மன் கன்னிக்கால்வெட்டும் நிகழ்வு இடம்பெறும் அதாவது ஊர்வலம் செல்லும் தினங்களில் அம்மன் அடியார்களால் கன்னிக்கால்வெட்டும் இடம் இனங்காணப்பட்டு அந்த இடத்திலே கன்னிக்கால் வெட்டப்படும் அது பூவரசு மரத்திலே கன்னிக்கால் வெட்டப்பட்டு அதனை சுமந்துவந்து அன்றிரவு கல்யாணப்பந்தல் சோடனைசெய்து அம்மனுக்குத் கல்யாணச்சடங்கு சிறப்பாக இடம்பெற்று வருவது வழமையாக இருக்கிறது.

20 ஆம் திகதி மாலை அம்மன் சமுத்திரநீராடலுக்காக அம்பாரைமாவட்டத்தின் எல்லையில் உள்ள பெரியநீலாவணைக் கிராமத்திற்குச் சென்று பெரியநீலாவணையில் உள்ள விஷ்ணு ஆலயம் பேச்சியம்மன் ஆலயம் பெரியதம்பிரான் ஆலயங்களுக்குச் சென்று விஷேட பூசைகள் நடாத்தப்பட்டு பின்னர் கடலுக்குச்சென்று விசேடபூசைசெய்து அம்மன் தேவாதிகளுக்கு சாட்டையடி வழங்கி கடல்நீராடி அன்றிரவு நோப்புநூல் கட்டப்பட்டு 21 ஆம் திகதி அதிகாலை வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் இடம்பெறும்

அதனைத்தொடர்ந்து 21 ஆம்திகதி வெள்ளிக்கிழமை மாலை நூற்றுக்கணக்கான பொங்கல்பானைகள் ஆலயத்தைச்சூழவுள்ள பகுதிகளில் பொங்கல் இடம்பெறுவதுடன் விநாசகப்பானையும் ஆலையத்திற்கு முன்முகப்பில் பொங்கப்பட்டு விசேடபூசைகள் நடாத்தப்படும்.

அன்றைய நாள் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் அருகில் இருக்கும் அம்பாரைப்பிள்ளையார் ஆலயத்தில் கன்னிமார் கொழுவைத்

து பின்னர் அவர்கள் மாரியம்மன்ஆலயத்திற்கு வெள்ளைத் துணியினால் அவர்களை போர்வை செய்து அழைத்துச்செல்லப்பட்டு விசேடபூசைகள் நடாத்தப்படும்.

ஆலயத்தின் பூசைகளை சிவசிறி கு.நல்லராசா குருக்களின் தலைமையில் இடம்பெற இருப்பதுடன் உற்சவத்திற்கான ஒழுங்குகளை ஆலயத்தலைவர் க.அழகரெத்தினம் மற்றும் செயலாளர் எஸ்.குகதாசன் பொருளாளர் எஸ்.ரமேஸ் உட்பட நிருவாகசபையினர் ஆலய கும்பாபிஷேகம் மற்றும் உற்சவத்திற்கான ஏற்பாடுகளைச்செய்து வருகின்றனர்.