கல்முனை கிறீன்பீல்ட் வீட்டுத் திட்ட புதிய பள்ளிவாசல் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)    கல்முனை கிறீன்பீல்ட் வீட்டுத் திட்டத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முகையதீன் பள்ளிவாசல் திறப்பு விழா  பள்ளிவாசல் நிர்வாகத் தலைவர் ஏ.எல்.நபீர் ஒருங்கிணைப்பில் கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் டொக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ் அவர்களுடைய தலைமையில் நடைபெற்றது.

றஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.மன்சூர் அவர்களுடைய புதல்வருமான றஹ்மத் மன்சூர் அவர்களுடைய முயற்சியினால் வை.டப்ளியு.எம்.ஏ (young  woman’s Muslim Association) அமைப்பின் நிதி அனுசரணையோடு புனரமைப்பு செய்யப்பட்ட இப்பள்ளிவாசலை இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் எச்.இ. பெட்லி ஹிஸாம் ஆதம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் வை.டப்ளியு.எம்.ஏ அமைப்பின் தலைவி பவாஸா தாஹா, பிரதேச செயலாளர் ஜெ.லியாகத் அலி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி றம்ஸீன் பக்கீர், மனித உரிமைகள் அமைப்பின் பணிப்பாளர் கலாநிதி எம்.என்.எம்.அஸீம், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிஸார் ஜெ.பி,  முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின்  சகோதரி சல்மா ஹம்சா, மலேசியா உயர்ஸ்தானிகரின் பாரியார் உட்பட பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள், மைமூனா மதரஸா நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன் போது கலந்து கொண்ட அதிதிகளுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் நிகழ்வின் இறுதியில் விசேட துஆ பிரார்த்தனையும் இங்கு இடம் பெற்றது.